அஜித்குமார், வினோத்துடன் மீண்டும் இணையும் போனி கபூர்!


அஜித்குமார், வினோத்துடன் மீண்டும் இணையும் போனி கபூர்!
x
தினத்தந்தி 30 Sep 2021 5:59 AM GMT (Updated: 2021-09-30T11:29:14+05:30)

நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத்துடன் மீண்டும் இணைய உள்ளதாக தயாரிப்பாளார் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் அஜித்குமார் நடிப்பில், வினோத் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் ‘வலிமை’. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா வில்லனாக நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பிலான இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் நாங்க வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

வலிமை திரைப்படம் வருகிற 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தியேட்டர்களில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் வலிமை படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், பைக் ரேஸ் என வெளியான இந்த க்லிம்ப்ஸ் வீடியோ மிரட்டலாக வெளியானது.

இதனிடையே ரஷ்யாவில் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து, இறுதிகட்ட பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் டீசர், டிரைலர் போன்றவை முக்கிய நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத்துடன் மீண்டும் இணைய உள்ளதாக தயாரிப்பாளார் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியின் போது, “பாலிவுட்டின் டாப் தயாரிப்பாளராக இன்று வளர்ந்துள்ள எனது திரையுலக அனுபவத்தில் அஜித் மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் பாசத்தை போல் நாட்டிலேயே வேறு எந்த நடிகருக்கும் இருப்பதை நான் பார்த்ததில்லை. அஜித் மீது ரசிகர்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதால், படம் குறித்த அப்டேட் கேட்க அவர்களுக்கு உரிமை உள்ளது. வலிமை பட கிளிம்ப்ஸ்-க்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 6 நாள் சண்டைக்காட்சிக்கு ஓராண்டுக்கு மேலாக காத்திருந்தோம். அந்த காட்சிகள் சரியாக வரவேண்டும் என்பதில் அஜித் தீவிரமாக இருந்தார். அஜித் மற்றும் வினோத்துடன் மீண்டும் இணைய இருக்கிறேன்” என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்தார். 

முன்னதாக நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் 61 படத்தில் வினோத், போனி கபூர் கூட்டணி இணைய உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானநிலையில், இதனை தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். வலிமை ரிலீசுக்கு முன்பே, அஜித் மற்றும் வினோத்தின் புதிய படம் போனி கபூரின் தயாரிப்பில் தொடங்கும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story