சினிமாவை ஆயுதமாக எடுத்துக்கொண்ட டைரக்டர்கள் - எஸ்.ஏ.சந்திரசேகரன்


சினிமாவை ஆயுதமாக எடுத்துக்கொண்ட டைரக்டர்கள் - எஸ்.ஏ.சந்திரசேகரன்
x
தினத்தந்தி 23 Nov 2021 8:40 AM GMT (Updated: 23 Nov 2021 8:40 AM GMT)

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘நான் கடவுள் இல்லை' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. டைரக்டர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டார்.

விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது:-

நான், இயக்குனர்கள் அமீர், சமுத்திரகனி போன்றவர்கள் சினிமாவை ஒரு வாழ்வியலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறோம். அந்த வழியில் நாங்கள் சினிமாவை ஒரு ஆயுதமாக எடுத்துக்கொண்டு இந்த சமூகத்துக்கும், சமுதாயத்துக்கும், நாட்டு மக்களுக்கும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை சொல்ல முடியுமா? என்று பயணிக்கிறோம். நீண்ட நாட்களுக்கு பிறகு 1980 காலகட்ட பாணியில் மனதுக்கு நிறைவாக ஒரு படத்தை இயக்கி இருக்கிறேன். சமுத்திரகனி, அமீர் போன்றவர்கள் கஷ்டப்படும் உதவியாளர்களுக்கு விளம்பரப்படுத்தாமல் உதவி செய்து வருவதால், அவர்களிடம் உள்ள மனிதநேயத்தை கண்டு வியந்து இருக்கிறேன்.

சினிமாவில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு தான் நடிப்பதற்கான சந்தர்ப்பம் அமைகிறது. ரஜினிகாந்த் கூட எதிர்மறையான கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் தான். இந்த படத்தில் கதாநாயகனை விட, பல இடங்களில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரவணன் தான் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார். இந்த படம் வெளியான பிறகு சரவணன் பக்கம் குழந்தைகள் வரவே மாட்டார்கள். வருவதற்கு பயப்படுவார்கள்.”

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

விழாவில் நடிகர்கள் சரவணன், சமுத்திரகனி, நடிகைகள் சாக் ஷி அகர்வால், இனியா, பட அதிபர் பி.டி.செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story