கமல்ஹாசனுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்..!


கமல்ஹாசனுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்..!
x
தினத்தந்தி 16 Jan 2022 2:55 AM GMT (Updated: 2022-01-16T08:25:03+05:30)

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 'டான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரிக்க இருக்கின்றன. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இருவரும் இணைந்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்து உள்ளனர்.

இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், 'அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம். சினிமாவின் இரண்டு வலிமையான சக்திகளாகிய கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் உற்சாகமாக இருக்கிறது. இதை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் ராஜ்குமாருக்கு நன்றிகள்' என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 'சில வேலைகள்  சந்தோசத்தை தரும்; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும். சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும். தம்பி சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜ்குமார் போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி. இருவருக்கும் வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்.

Next Story