விமர்சனங்களுக்கு நடிகர் அஜித்குமார் விளக்கம்
வலிமை படம் பற்றிய விமர்சனங்களுக்கு நடிகர் அஜித் சார்பில் அவரது மானேஜர் அளித்துள்ள விளக்கம், வேகமாக பரவி வருகிறது.
அஜித்குமார் நடிப்பில் திரைக்கு வந்துள்ள வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்து சிலர் எதிர்மறையாக பேசி வருகிறார்கள். இதற்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இந்த மோதல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது. நடிகர்கள் சிலரும் அஜித்குமாரை விமர்சித்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் விமர்சனங்களுக்கு அஜித்குமார் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி வெளியிட்ட கருத்தை நினைவுப்படுத்தி பதில் அளித்துள்ளார். அஜித் சார்பில் அவரது மேலாளர் டுவிட்டரில் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அஜித்குமார், “ரசிகர்கள், வெறுப்பாளர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோர் ஒரு நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களின் வெறுப்பையும், நடுநிலையாளர்களின் சார்பற்ற நிலைபாட்டையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். வாழு, வாழ விடு. இது சம்பந்தப்பட்டவர்களுக்கான ஒரு நினைவூட்டல், எப்போதும் நிபந்தனையில்லா அன்புடன் அஜித்குமார்’’ என்று கூறியுள்ளார். அஜித்குமாரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story