வீட்டுவாடகை கொடுக்கக்கூட பணம் இல்லை - பாலிவுட் இயக்குனர் வருத்தம்


வீட்டுவாடகை கொடுக்கக்கூட பணம் இல்லை - பாலிவுட் இயக்குனர் வருத்தம்
x
தினத்தந்தி 17 March 2024 8:05 AM GMT (Updated: 17 March 2024 8:14 AM GMT)

நான் இயக்கி தயாரித்த 'ஜோரம்' படம் எந்த லாபத்தையும் கொடுக்கவில்லை என்று இயக்குனர் தேவாஷிஷ் மகிஜா கூறினார்.

மும்பை,

பாலிவுட் இயக்குனர் தேவாஷிஷ் மகிஜா இயக்கத்தில் 2023 -ம் ஆண்டு மனோஜ் பாஜ்பாய், தன்னிஷ்தா சாட்டர்ஜி போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியான படம் ஜோரம்.

இது, 69-ம் பிலிம் பேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த கதை என 3 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. அதில் சிறந்த படம் மற்றும் சிறந்த கதைக்கான விருதுகளை ஜோரம் வென்றது. ஆனாலும் இப்படம் வசூல் ரீதியாக எந்த பலனும் கொடுக்கவில்லை. விமர்சகர்களால் மட்டுமே பாராட்டை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான தேவாஷிஷ் மகிஜா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் "நான் இயக்கிய படங்கள் மூலம் எனக்கு பணம் கிடைத்ததில்லை. கடந்த 5 மாதங்களாக என் வீட்டுவாடகையை செலுத்தக்கூட பணம் இல்லாத நிலையில் நிற்கிறேன். இதனால், வீட்டைவிட்டு அனுப்பிவிடாதீர்கள் என்று வீட்டு உரிமையாளரிடம் கெஞ்சினேன்.

காரணம் நான் இயக்கி தயாரித்த 'ஜோரம்' படம் எந்த லாபத்தையும் கொடுக்கவில்லை. அதனால் இப்போதுநான் கடனாளியாக நிற்கிறேன். என்னிடம் 20 கதைகள் தயாராக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் அதில் முதலீடு செய்ய தயாராக இல்லை." என்று வருத்தமாக கூறினார்.

தேவாஷிஷ் மகிஜா இயக்குனராக அறிமுகமான படம் அஜ்ஜி. இப்படம் ரூ. 1 கோடி செலவில் எடுக்கப்பட்டது. ஆனால் ரூ. 15 லட்சம் மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story