ரத்தம் தெறிக்க.. கையில் சூலத்துடன் ரிஷப் ஷெட்டி.. வைரலாகும் காந்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!


ரத்தம் தெறிக்க.. கையில் சூலத்துடன் ரிஷப் ஷெட்டி.. வைரலாகும் காந்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
x
தினத்தந்தி 27 Nov 2023 7:52 AM GMT (Updated: 27 Nov 2023 8:03 AM GMT)

'காந்தாரா தி லெஜெண்ட் சாப்டர் 1' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை,

கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.

ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்ச்சியாக (Sequel) இல்லாமல், காந்தாராவின் அறிமுகமாக (Prequel) உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். அதன்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பிறகு ரிஷப் ஷெட்டி படத்தின் கதையை எழுதி முடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகும் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு 'காந்தாரா தி லெஜெண்ட் சாப்டர் 1' என பெயரிடப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரத்தம் தெறிக்க கையில் சூலத்துடன் படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி இடம் பெற்றுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

காந்தாரா தெய்வத்தின் அறிமுகம் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்த படத்தில் இடம்பெறும் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பான் இந்தியா படமாக உருவாகும் 'காந்தாரா தி லெஜெண்ட் சாப்டர் 1' அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

'காந்தாரா தி லெஜெண்ட் சாப்டர் 1' பர்ஸ்ட் லுக் போஸ்டர்:


Next Story