பயில்வான் படத்திலிருந்து முதலில் விலக நினைத்த சுதீப்


பயில்வான் படத்திலிருந்து முதலில் விலக நினைத்த சுதீப்
x
தினத்தந்தி 21 Sep 2019 10:23 AM GMT (Updated: 21 Sep 2019 10:23 AM GMT)

வெற்றி படமாக அமைந்த பயில்வான் படத்திலிருந்து முதலில் விலக நினைத்திருந்தார் சுதீப்.

கன்னடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘பயில்வான்’ என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இது கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஒளிப்பதிவாளராக பலப் படங்களில் பணியாற்றிய வரும், ‘கஜகேசரி’, ‘ஹெபுல்லி’ ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவருமான கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ‘ஹெபுல்லி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவதாக கிச்சா சுதீப்பும், இயக்குனர் கிருஷ்ணாவும் இணைந்திருக்கும் இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் கிச்சா சுதீப் தனது உடல் எடையை கூட்டியும், உடலுக்கு வலுவேற்றியும் ஒரு பாக்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதே நேரத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு முதலில் விருப்பமே இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

“கிருஷ்ணா இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது, எனக்கு அதில் நடிக்க விருப்பமில்லை. உடலை பேணுவதில் எந்த அக்கறையும் இதுவரை காட்டாத எனக்கு, இந்தக் கதாபாத்திரம் சரியாக வராது என்று நினைத்தேன். ஏனெனில் ஜிம்மே கதியென்று கிடக்கும் மற்ற நடிகர்களைப் போல என்னால் இருக்க முடியாது என்று எண்ணினேன். உடலைப் பேணுவது எவ்வளவு கடினமான வேலை என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் சவாலாக ஏற்றுக்கொண்டுதான் இந்தப் படத்தில் நடிக்கத் தொடங்கினேன். அதற்காக உடற் பயிற்சி கூடத்திலேயே தவம் கிடக்கத் தொடங்கினேன். 25 சதவீதம் படப் பிடிப்பு முடிந்த நிலையில், இந்தப் படத்தை விட்டு விலகிவிடலாம் என்று கூட நினைத்தேன். படத்தில் வரும் பாக்சிங் காட்சிகள், அந்தளவுக்கு எனக்கு காயத்தையும், அயர்ச்சியையும் தந்திருந்தது. ஆனால் இயக்குனர் கிருஷ்ணா என்மீது வைத்த அபார நம்பிக்கையால், இன்று நானும் என்னுடைய கதாபாத்திரமும் சாதித்திருக்கிறது” என்றார்.

Next Story