‘என் ராசாவின் மனசிலே-2' விரைவில் படமாகும் - நடிகர் ராஜ்கிரண்

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண், மீனா ஜோடியாக நடித்து 1991-ல் திரைக்கு வந்த என் ராசாவின் மனசிலே படம் பெரிய வரவேற்பை பெற்றது.
இளையராஜா இசையில் குயில்பாட்டு, போடா போடா புண்ணாக்கு, பாரிஜாத பூவே, பெண் மனசு ஆழம் என்று, சோல பசுங்கிளியே போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று ராஜ்கிரண் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில் படம் வெளியாகி 30 வருடங்கள் ஆனதையொட்டி ராஜ்கிரண் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இறைவன் அருளால் என் ராசாவின் மனசிலே படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்தை எனது மகன் நைனார் முஹம்மது எழுதி இயக்குகிறார்.
கதையை எழுதி முடித்து விட்டு திரைக்கதையை எழுதுவதில் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார். வெகு விரைவில் படப்பிடிப்பைதொடங்க திட்டமிட்டு இருக்கிறார். இறை அருளால் இப்படமும் மாபெரும் வெற்றியடைய உங்கள் பிரார்த்தனைகளையும், வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன்'' என்று கூறியுள்ளார். என் ராஜாவின் மனசிலே 2-ம் பாகத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story