அனுமதியின்றி யூடியூப்பில் இந்தி திரைப்படம் பதிவேற்றம் - சுந்தர் பிச்சை மீது வழக்கு


அனுமதியின்றி யூடியூப்பில் இந்தி திரைப்படம் பதிவேற்றம் - சுந்தர் பிச்சை மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Jan 2022 5:01 PM GMT (Updated: 27 Jan 2022 5:01 PM GMT)

தமது திரைப்படத்தை யாருக்கும் விற்கவில்லை, இருப்பினும், அது லட்சக்கணக்கான பார்வைகளுடன் யூடியூப்பில் வலம் வருவதாக இந்தி திரைப்பட தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

மும்பை:

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன்,  ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ என்ற படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி உள்ளார். இதில் சிவ தர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் உபென் படேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இன்னும் திரைக்கு வராத நிலையில் அந்த திரைப்படம் யூடியூப்பில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக யூடியூப் நிர்வாகத்திடம் பலமுறை அவர் புகார் தெரிவித்தும் அதை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் புகார் தெரிவித்துள்ளார்.  

தமது திரைப்படத்தை யாருக்கும் விற்கவில்லை, வெளியிடவில்லை, இருப்பினும், அது லட்சக்கணக்கான பார்வைகளுடன் யூடியூப்பில் வலம் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யூடியூப் நிர்வாகம் விளம்பரங்கள் மற்ற ஆதாரங்கள் வழியே இந்தி திரைப்படத்தின் மூலம் பெரும் வருவாயை ஈட்டியதாக சுனீல் தர்ஷனின் வழக்கறிஞர் ஆதித்யா தெரிவித்துள்ளார்.

காப்புரிமை சட்டத்தை மீறி யூடியூப்பில் திரைப்படம் பதிவேற்றப்பட்டது தொடர்பாக சுனில் தர்ஷன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எஃப்ஐஆர் பதிவு செய்ய மும்பை காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கூகுள் முதன்மை செயல் அதிகாரி  சுந்தர் பிச்சை மற்றும் யூடியூப் ஊழியர்கள் ஐந்து பேர் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story