புரியாத புதிர்


புரியாத புதிர்
x
தினத்தந்தி 2 Sep 2017 5:08 PM GMT (Updated: 2 Sep 2017 5:08 PM GMT)

கதையின் கரு: விளையாட்டாக எடுத்த ஒரு வீடியோ படம், வினையான விபரீதம். விஜய் சேதுபதி, காயத்ரி, மஹிமா நம்பியார் ஆகிய மூவரும் கல்லூரியில் படிக்கிறார்கள்.

காயத்ரியும், மஹிமா நம்பியாரும் நெருக்கமான தோழிகள். ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். அப்போது மஹிமா நம்பியாரை, காயத்ரி விளையாட்டாக வீடியோ படம் எடுக்கிறார். அந்த படத்தை விஜய் சேதுபதியின் நண்பர்கள் பரவ விடுகிறார்கள். அது, கல்லூரி முதல்வர் வரை போய், மஹிமாவை கல்லூரியில் இருந்து நீக்குகிற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே மூத்த மகளின் காதல் திருமணத்தால் நொந்து போய் இருக்கும் அவருடைய அம்மா–அப்பாவுக்கு இளைய மகள் மஹிமாவின் வீடியோ படம், வேதனையை ஏற்படுத்துகிறது. மஹிமாவை வெறுத்து ஒதுக்குகிறார்கள். மஹிமா தற்கொலை செய்து கொள்கிறார். தோழியின் மரணம் காயத்ரிக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மஹிமாவின் மரணத்துக்கு காரணமான விஜய் சேதுபதியையும், அவருடைய நண்பர்களையும் காயத்ரி எப்படி பழிவாங்குகிறார்? என்பது கதை.

காதலும், மோதலும் கலந்த கதை. அதை மர்ம பட பாணியில் திகிலாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி. வெள்ளை உடை அணிந்த ஒரு இளம்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வது போல், படம் ஆரம்பிக்கிறது. ‘பிளாஷ்பேக்’கில், விஜய் சேதுபதி–காயத்ரி இடையே அரும்பும் நட்பு, உயிருக்குயிரான காதலாவது வரை, காட்சிகள் மென்மையாக கடந்து போகின்றன.

அந்த ஜவுளிக்கடைக்குள் உள்ள டிரையல் ரூமில் காயத்ரி உடை மாற்றுவதை யாரோ படம் பிடித்து விஜய் சேதுபதியின் போனுக்கு அனுப்பியதும், கதையில் விறுவிறுப்பு பற்றிக் கொள்கிறது. அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பும், வீடியோ படம் எடுப்பவர் யார்? என்ற ‘சஸ்பென்ஸ்’சும் பதற்றத்தை கூட்டுகிறது.

இதுபோன்ற பதற்றமான கதைக்குள் பாடல்களை அடிக்கடி திணிப்பது வேகத்தடைகளாக அமையும் என்ற புரிதலை மீறி பாடல்களை திணித்து இருப்பது, சோதனை. அதனால் மஹிமா தொடர்பான முன் கதை நெளிய வைக்கிறது. திருட்டுத்தனமாக வீடியோ படம் எடுத்தவர் யார்? என்ற ‘சஸ்பென்ஸ்,’ யூகிக்க முடியாத திருப்பம்.

காதலியை உண்மையாக நேசிக்கும் ஒரு காதலராக விஜய் சேதுபதி. காதலின் பரவசத்தை முகத்தில் துல்லியமாக காட்டியிருக்கிறார். காயத்ரியை காப்பாற்ற அவர் காட்டும் பதற்றமும், யார் அவன்? என்று அறிய துடிக்கும் ஆத்திரமும் இயல்பாக இருக்கிறது. ‘‘நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏன் தண்டனை?’’ என்று அவர் கலங்கியபடி காயத்ரியிடம் நியாயம் கேட்கிற காட்சி, நெகிழ வைக்கிறது.

ஒரு சராசரி பெண்ணின் நடை, உடை, பாவனையை நகல் எடுத்தது போல், காயத்ரி. மஹிமாவுக்கு அனுதாபகரமான வேடம். தினேஷ் கிருஷ்ணனின் கேமரா, மர்ம பட பாணியில் காட்சிகளை திகிலாக பதிவு செய்து இருக்கிறது. சம் சி.எஸ்.சின் பின்னணி இசை, மிரட்டல்.

இதில், ‘புரியாத புதிர்’ எது?


Next Story