விமர்சனம்
மெர்சல்

மெர்சல்
விஜய், சத்யராஜ், வடிவேலு சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், கோவை சரளா அட்லி ஏ.ஆர்.ரகுமான் ஜி.கே.விஷ்ணு
தந்தையை கொன்றவர்களை பழிவாங்கும் மகன்கள். ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர் விஜய்யை வெளிநாட்டினர்
Chennai
கதையின் கரு:- பாரீசில் நடக்கும் மருத்துவ மாநாட்டுக்கு அழைத்து மனித நேயர் விருது கொடுத்து கவுரவிக்கின்றனர். அதே நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து வந்த ஒரு மருத்துவமனை அதிபர் குத்திக் கொல்லப்படுகிறார். சென்னையிலும் சில டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களை கடத்தி சாகடிப்பது தொடர்கிறது. போலீஸ் அதிகாரி சத்யராஜ் துப்புதுலக்குகிறார்.

இன்னொரு மருத்துவமனை அதிபர் எஸ்.ஜே.சூர்யாவும் கொலையாளியை பழி தீர்க்க தேடுகிறார். இவர்களின் சந்தேகம் ஐந்து ரூபாய் டாக்டர் விஜய்யை நோக்கி திரும்புகிறது. சத்யராஜ் விசாரிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவின் ஆட்கள் கொலை செய்ய பாய்கிறார்கள். அப்போது கொலையாளி நான்தான் என்று பிரகடனம் செய்து மேஜிக் நிபுணராக இன்னொரு விஜய் வந்து நிற்க-திருப்பம். எஸ்.ஜே.சூர்யாவும் தனது கொலை பட்டியலில் இருப்பதாக கர்ஜிக்கிறார்.
மேஜிக் விஜய் தனது தம்பி என்று தெரிந்து அதிர்கிறார், டாக்டர் விஜய். கொலைக்கான சஸ்பென்ஸ் அவிழும்போது பிளாஷ்பேக்கில் தந்தையாக மூன்றாவது விஜய் வருகிறார். இவர்களுக்கும் கொலையுண்டவர்களுக்கும் என்ன தொடர்பு? என்பது மீதி கதை.

விஜய் மூன்று கதாபாத்திரங்களில் வந்து ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார். ஐந்து ரூபாய் டாக்டர் மாறனாக ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்கிறார். விருது வாங்க பாரீசுக்கு வேட்டி சட்டையில் சென்று விமான நிலையத்தில் சோதனைக்கு உள்ளாகி அவமானப்பட்டு அங்கு உயிருக்கு போராடும் வெளிநாட்டு பெண்ணை காப்பாற்றி தமிழன் பெருமையை நிலை நாட்டுகிற காட்சி கைதட்ட வைக்கிறது.சமந்தாவிடம் ரோஸ்மில்க் கேட்டு குழைவது சுவாரஸ்யம். மேஜிக் நிபுணர் வெற்றியாக அதிரடி காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டையில் அனல். ஊர் தலைவர் தளபதியாக பஞ்சாபில் மல்யுத்த வீரர்களை பந்தாடி அறிமுகமாகும் காட்சியில் ஆரவாரம். விவசாயிகளுக்காக போராடுவது, சொத்துகளை விற்று கிராமத்தில் ஆஸ்பத்திரி கட்டுவது என்று அந்த கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார்.

கோவில் திருவிழா வெடி விபத்தும் மக்களை காப்பாற்றும் விஜய் போராட்டமும் பரபரப்பான காட்சிகள். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என்று மூன்று கதாநாயகிகள். காஜல் அகர்வாலுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. விஜய்யை சமந்தா, ‘டேய் தம்பி இங்கே வா’ என்று அழைப்பது ரசிக்க வைக்கிறது. ஊர் தலைவர் விஜய்யை காதலித்து மணக்கும் பஞ்சாப் பெண்ணாக நித்யாமேனன் ‘சென்டிமென்ட்’ காட்சிகளில் மனதில் நிற்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா கெட்டப்பும், ஸ்டைலான வில்லத்தனமும் மிரட்டல்.
வடிவேலு, யோகிபாபு நகைச்சுவை ஏரியாவை கலகலப்பாக வைத்துள்ளனர். குணசித்திர நடிப்பிலும் வடிவேலு கவர்கிறார். சத்யராஜ், கோவை சரளா, காளி வெங்கட் கதாபாத்திரங்களும் நிறைவு. வேட்டி, சட்டை புகழ்பாடுவது, கார்பரேட் முதலாளிகள் கைக்கு மாறிய ஆஸ்பத்திரி அவலங்கள், அறுவை சிகிச்சை இறப்புகள், விவசாயிகள் நலன் என்று சமூக அக்கறை பின்னணியில் விறுவிறுப்பான ஆக்‌ஷன் கதையை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் அட்லி. ஜி.எஸ்.டி. வரி பற்றி விஜய் பேசும் வசனம் கைதட்ட வைக்கிறது.

பிளாஷ்பேக் காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம். பஞ்சாப், ஹவுசிங்போர்டு குடியிருப்புகள், வெளிநாடு என்று விஷ்ணு கேமரா சுழன்று இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவிஞர் விவேக் எழுதிய பாடல்களும், அதை படமாக்கிய விதமும் கண்களுக்கும் காதுக்கும் விருந்து. குறிப்பாக ஆளப்போறான் தமிழன் பாடல் செம கெத்து. தீபாவளி சரவெடியாக ‘மெர்சல்.’

முன்னோட்டம்

சூ மந்திரகாளி

ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூ மந்திரகாளி’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: செப்டம்பர் 14, 07:08 PM

பகவான்

காளிங்கன் இயக்கத்தில் ஆரி அர்ஜுனன், பூஜிதா பொன்னாடா நடிப்பில் உருவாகி இருக்கும் பகவான் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: செப்டம்பர் 14, 04:14 PM

வாஸ்கோடகாமா

நகுல் நடிப்பில் உருவாக இருக்கும் வாஸ்கோடகாமா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 100 பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

பதிவு: செப்டம்பர் 14, 03:11 PM
மேலும் முன்னோட்டம்