பலூன்


பலூன்
x
தினத்தந்தி 7 Jan 2018 5:32 PM GMT (Updated: 7 Jan 2018 5:32 PM GMT)

ஒரு பாழடைந்த வீடும், அதில் குடியிருக்கும் பேய்களும், "பலூன்" என்ற படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  ஊட்டியில், மழை பெய்து கொண்டிருக்கும் ஒரு இரவில், ஒரு கள்ளக்காதல் ஜோடி, ‘பைக்’கில் வருகிறார்கள். மழை பலத்துக் கொள்வதால், பக்கத்தில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ஒதுங்குகிறார்கள். இரண்டு பேரையும் பேய் கொன்று விடுகிறது.

இந்த நிலையில், சினிமா டைரக்டர் ஜெய், ஒரு திகில் படத்தை இயக்க முன் வருகிறார். திரைக்கதையை தயார் செய்வதற்காக அவர் தனது மனைவி அஞ்சலி, அண்ணன் மகன் ரிஷி, உதவியாளர்கள் யோகி பாபு, கார்த்திக் யோகி ஆகியோருடன் ஊட்டி வருகிறார். பேய் வீட்டுக்கு அருகில் உள்ள விருந்தினர் விடுதியில் தங்குகிறார்கள். பேயிடம் இருந்து அவர்கள் தப்பினார்களா, இல்லையா? என்பதற்கு, ‘பலூன்’ விடையளிக்கிறது.

சினிமா டைரக்டராகவும், பலூன் வியாபாரியாகவும், ஜெய் 2 வேடங்களில் வருகிறார். பேய் மீது நம்பிக்கை இல்லாத டைரக்டர், சாதி வெறிக்கு பலியாகும் பலூன் வியாபாரி ஆகிய 2 வேடங்களிலும் ஜெய், வித்தியாசம் காட்டி இருக்கிறார். இரண்டு வேடங்களுக்கும் ஒப்பனை மூலம் மாறுபட்ட முகங்களை காட்டியிருக்கிறார். திரைக்கதையை தயார் செய்வதற்காக ஊட்டி வந்த சினிமா டைரக்டர் ஜெய், ஒரு புது டைரக்டருக்கு ஏற்படும் அசவுகரியங்களை தனது நடிப்பில், மிக இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவருக்கும், அஞ்சலிக்குமான காதலையும், நெருக்கத்தையும் இன்னும் கொஞ்சம் அதிகமாக காட்சிப்படுத்தியிருக்கலாம். பேய் பிடித்த அஞ்சலியை காட்டும்போது, திகில் வரவில்லை. பலூன் வியாபாரி ஜெய்-ஜனனி அய்யரின் காதலும், அவர்களுக்கு எதிரான சாதி பிரச்சினையும், அனுதாபத்தை ஏற்படுத்துகிறது.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை யோகி பாபுவின் வசன காமெடி, தியேட்டரை கலகலப்பாக வைத்து இருக்கிறது. அவர் வருகிற காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. நாகிநீடு, வில்லனாக வருகிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவும் திகில் காட்சிகளுக்கு மேலும் திகிலூட்டுகின்றன. எல்லா பேய் படங்களிலும் வரும் திகில் காட்சிகளே இந்த படத்திலும் உள்ளன. பேய் வீட்டுக்குள் இருக்கும் பாதாள அறையும், கிணற்றுக்குள் இருந்து மேலே எழும்பும் பலூன்களும் பயமுறுத்துகின்றன. சாதி வெறி மற்றும் ஆணவ கொலையை காட்சிப்படுத்தியிருக்கும் விதம், திக்..திக்...

Next Story