விமர்சனம்
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்
விஜய் சேதுபதி , கவுதம் கார்த்திக் நிகாரிகா, காயத்ரி ஆறுமுககுமார் ஜஸ்டின் பிரபாகரன் ஸ்ரீ சரவண்னன்
காட்டுவாசிகளிடம் சிக்கிய நாயகனும், நாயகியும் படம் "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்" படத்தின் சினிமா விமர்சனம்.
Chennai
கதையின் கரு:  ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமம், எமசிங்கபுரம். மலைகள் சூழ்ந்த காட்டுப்பகுதியில், இப்படி ஒரு கிராமம் இருப்பது வெளியுலகுக்கு தெரியாது. விசித்திரமான பழக்கவழக்கங்களை கொண்ட அந்த கிராமத்தின் தலைவி, விஜி சந்திரசேகர். இவருடைய மகன் விஜய் சேதுபதிதான் காட்டுவாசிகளின் தளபதி.

இவர்களின் குலதெய்வம், எமன். தொழில், திருட்டு. யாரையும் கொலை செய்யாமல், பெண்களுக்கு எந்த கேடும் விளைவிக்காமல், அரசியலில் ஈடுபடாமல், திருட்டு தொழில் செய்வது இவர்களின் கொள்கை. விஜய் சேதுபதி தலைமையில் இந்த திருட்டு கும்பல் நகருக்குள் வருகிறது. திருடுவதற்கு ஒரு வீட்டை தேர்வு செய்கிறார்கள். அந்த வீட்டில் உள்ள நிஹாரிகாவின் போட்டோவை பார்த்து விஜய் சேதுபதி அதிர்ச்சி அடைகிறார்.

சின்ன வயதிலேயே அவருக்காக நிச்சயிக்கப்பட்ட பெண், நிஹாரிகா. சொந்த அக்காள் மகள். அவரை, விஜய் சேதுபதி காட்டுக்குள் கடத்தி செல்கிறார். நிஹாரிகாவின் காதலன், கவுதம் கார்த்திக். காதலி நிஹாரிகாவை மீட்பதற்காக திருட்டு கும்பலை பின்தொடர்கிறார். அவர் நிஹாரிகாவை மீட்டாரா, இல்லையா? என்பதே கதை. தாதாக்கள், அடிதடி, பேயும் அதை சார்ந்த நகைச்சுவையும் என ஒரே மாதிரியான படங்களை பார்த்து சலிப்படைந்த கண்களுக்கு முற்றிலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம், இது.

மாறுபட்ட கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேடிப்பிடித்து நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு தீனி போடுகிற கதை. தலையில் எருமை மாட்டின் கொம்புகள். முடிச்சுகளுடன் கூடிய நீளமான தலைமுடி. முறுக்கு மீசை, அடர்த்தியான தாடி சகிதம் தமிழும், தெலுங்கும் கலந்து பேசுகிற ஒரு காட்டுவாசியாக, எதிரும் புதிரும் கலந்த நாயகனாக நகைச்சுவை விருந்தளித்து இருக்கிறார், விஜய் சேதுபதி.

இதுவரை ஏன் திருமணம் ஆகவில்லை? என்பதற்கு அவர் சொல்லும் விளக்கம், நல்ல தமாஷ்.

கவுதம் கார்த்திக் ஏறக்குறைய சிரிப்பு நாயகனாகவே மாறியிருக்கிறார். நிஹாரிகா மனதில் இடம் பிடிக்க இவர் செய்யும் சேட்டைகளும், ஒவ்வொரு ‘பிளான்’ ஆக போட்டு அடிவாங்குவதும், ரகளையான காட்சிகள். இவருடைய காதலியாக நிஹாரிகா. இளமையான நாயகி. கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். காட்டு ராணியாக காயத்ரி. ஒரே ஒரு வசனத்தை திரும்ப திரும்ப சொல்வதுதான் இவருடைய வேலை.

புரியாத மொழியுடன் ஆங்கிலமும் பேசுகிற காட்டுவாசிகளின் தலைவியாக விஜி சந்திரசேகர், நண்பர்கள் ரமேஷ் திலக், ராஜ்குமார், டேனியல், முத்து என அத்தனை நடிகர்களும் சிரிக்க வைக்கிறார்கள். நிமிடத்துக்கு நிமிடம் தியேட்டர் அதிர்கிறது.

காடுகளின் அழகை எல்லாம் அள்ளி வந்து இருக்கிறது, ஸ்ரீசரவணனின் கேமரா. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை, காட்சிகளுக்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டுகிறது. வசனம், தியேட்டரை கலகலப்பாக வைத்து இருக்கிறது. ஆறுமுககுமார் டைரக்டு செய்து இருக்கிறார்.

மிகையான கற்பனைகளும், நம்பமுடியாத சில காட்சிகளும், படத்தின் பலவீனங்கள். காயத்ரியை காட்டியதுமே அவர்தான் விஜய் சேதுபதிக்கு ஜோடி என்று யூகிக்க முடிகிறது. காட்டுவாசிகள் பற்றிய கதைகள் அபூர்வமாகவே வருகின்றன. அந்த வகையில், ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்,’ சூப்பர் காமெடி படம்.

முன்னோட்டம்

கால்ஸ்

ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 26, 06:01 AM

குட்டி லவ் ஸ்டோரி

தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.

பதிவு: பிப்ரவரி 15, 02:29 AM

ட்ரிப்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 05, 10:06 PM
மேலும் முன்னோட்டம்