தியா


தியா
x
தினத்தந்தி 29 April 2018 5:12 PM GMT (Updated: 29 April 2018 5:12 PM GMT)

அம்மாவின் வயிற்றில் கருவாக இருந்த ஒரு பெண் குழந்தை தன்னை கலைத்த டாக்டரையும், ‘கலைப்பு’க்கு காரணமாக இருந்தவர்களையும் பழிவாங்கும் கதை.

உணர்ச்சிபூர்வமாக கதை சொல்லும் டைரக்டர் விஜய்யிடம் இருந்து இன்னொரு படம் "தியா".

நாக ஷவ்ரியாவும், சாய் பல்லவியும் காதலன்-காதலி. படிக்கிற பருவத்திலேயே இருவரும் எல்லை மீறுவதால், சாய் பல்லவி கர்ப்பமாகிறார். குடும்ப டாக்டர் சுஜிதா திட்டுகிறார். இரண்டு பேர் குடும்பத்துக்கும் பிரச்சினை தெரியவர-முதலில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். பின்னர் சமாதானமாகி, திருமணம் பேசி முடிக்கிறார்கள். சாய் பல்லவியின் வயிற்றில் வளர்ந்த கருவை கலைக்கிறார்கள்.

இரண்டு பேருக்கும் ஐந்து வருடங்கள் கழித்து திருமணம் நடக்கிறது. சாய் பல்லவி கருவில் கலைக்கப்பட்ட குழந்தையின் நினைவாகவே இருக்கிறார். அந்த கரு கலைக்கப்படாமல் இருந்தால் எப்படியிருந்திருக்கும்? என்று வரைபடமாக்கி பார்க்கிறார். கற்பனையில் உருவான அந்த குழந்தைக்கு ‘தியா’ என்று பெயர் சூட்டுகிறார். தியா ஆவியாக வந்து நிற்கிறாள்.

“கருக்கலைப்பு செய்து விடலாம்” என்று முதலில் யோசனை சொன்ன தாத்தா நிழல்கள் ரவி, அதற்கு சம்மதம் தெரிவித்த பாட்டி ரேகா, தன்னை கலைத்த குடும்ப டாக்டர் சுஜிதா, ரேகாவின் சகோதரர் ஜெய்குமார் ஆகியோரை ஒருவர் பின் ஒருவராக தியா தீர்த்துக் கட்டுகிறாள். அடுத்து அவள் அப்பா நாக ஷவ்ரியாவுக்கு குறி வைக்கிறாள். ஆவியான மகளிடம் இருந்து கணவரை காப்பாற்ற சாய் பல்லவி போராடுகிறார். வெற்றி யாருக்கு? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

சாய் பல்லவியும், நாக ஷவ்ரியாவும் டாக்டர் சுஜிதா முன்பு அமர்ந்திருப்பது போலவும், “படிக்கிற வயசுல இது தேவையா?” என்று டாக்டர் சுஜிதா திட்டுவது போலவும், ஒரு எதிர்பார்ப்புடன் படம் ஆரம்பிக்கிறது. இருவருக்கும் பெற்றோர்களே திருமணம் செய்து வைப்பது, மனைவியின் உற்சாகமின்மையை கண்டுபிடித்து நாக ஷவ்ரியா விளக்கம் கேட்பது வரை, மெதுவான கதையோட்டம்.

‘தியா’ ஆஜரானதும் கதை திகில் பாதைக்கு திரும்பி, படம் வேகம் பிடிக்கிறது. இடையிடையே சிரிப்பு போலீஸ் ஆர்.ஜே.பாலாஜி வந்து வேகத்தடை ஏற்படுத்துகிறார். தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி, ‘நிழல்கள்’ ரவி மரணம் அடைவதும், செயல்படாத ‘லிப்ட்’டுக்குள் சிக்கி ரேகா இறந்து போவதும், டாக்டர் சுஜிதா கார் விபத்தில் பலியாவதும், மிரட்டலான திகில் காட்சிகள்.

சாய் பல்லவி அதிக ஒப்பனை செய்துகொள்ளாத இயல்பான முகத்தில், உணர்ச்சிகளை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். கலைக்கப்பட்ட கருவை நினைத்து இவர் கண்ணீர் விடுகிற காட்சியில், அய்யோ பாவம். இவருடைய காதல் கணவராக வரும் நாக ஷவ்ரியாவுக்கு (நல்ல வேளை) அதிக வேலை இல்லை.

பேபி வெரோனிகாவின் சலனம் இல்லாத முகமும், தீர்க்கமான பார்வையும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. சாய் பல்லவியின் அம்மாவாக ரேகா, ‘லிப்ட்’டுக்குள் சிக்கி கதறும்போது, உருக்கம். சாம் சி.எஸ்.சின் பின்னணி இசையும், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கின்றன.

ஒரு ஆவியை சுற்றி பின்னப்பட்ட கதை என்றாலும், அதிகமாக பயமுறுத்தாமல், அந்த ஆவி மீது அனுதாபம் ஏற்படுகிற மாதிரி காட்சிகளை அமைத்து, கதையுடன் ஒன்ற வைத்திருக்கிறார், டைரக்டர் விஜய். திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.

Next Story