இரவுக்கு ஆயிரம் கண்கள்


இரவுக்கு ஆயிரம் கண்கள்
x
தினத்தந்தி 19 May 2018 5:44 PM GMT (Updated: 19 May 2018 5:44 PM GMT)

ஒரு கொலையும், கொலையாளி யார்? என்று கண்டுபிடிக்க நடக்கும் திகிலான போராட்டம். படம் "இரவுக்கு ஆயிரம் கண்கள்" கதாநாயகன்-கதாநாயகி: அருள்நிதி-மகிமா நம்பியார். டைரக்‌ஷன்: மு.மாறன். படத்தின் சினிமா விமர்சனம்.

கதையின் கரு:

அருள்நிதி, ஒரு ‘கால் டாக்சி’ டிரைவர். இவருக்கும், தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் மகிமா நம்பியாருக்கும் காதல். தன் காதலை பெற்றோர்களிடம் எப்படி தெரிவிப்பது? என்ற கேள்வியுடன் இருக்கும் மகிமா, ஒரு சந்தர்ப்பத்தில் மர்ம நபர் ஒருவரால் கடத்தப்படுகிறார். கடத்தல்காரனிடம் இருந்து மகிமாவை அஜ்மல் காப்பாற்றுகிறார்.

அதையே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு மகிமாவுக்கு வலை விரிக்கிறார், அஜ்மல். அவருடைய வலையில் சிக்காமல் நழுவும் மகிமாவை விடாமல் பின்தொடர்கிறார், அஜ்மல். அவருக்கு சரியான பாடம் புகட்ட அவருடைய வீடு தேடி செல்கிறார், அருள்நிதி. அங்கே அஜ்மலின் காதலிகளில் ஒருவரான சுஜா வருணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடக்கிறார்.

அந்த கொலையை செய்ததாக அருள்நிதியை போலீஸ் கைது செய்ய முயற்சிக்கிறது. போலீஸ் பிடியில் இருந்து அருள்நிதி தப்பி ஓடுகிறார். உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்க அவர் ஓட்டமும் நடையுமாக தேடுதல் வேட்டை நடத்துகிறார். அடுத்தடுத்து அவர் சந்திக்கும் மர்மங்கள்தான் படத்தின் பின்பகுதி கதை.

தரமான கதைகளை தேடிப்பிடித்து நடிக்கும் அருள்நிதியின் மற்றொரு வெற்றிப்படம் என்று ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’க்கு உத்தரவாதம் கொடுக்கலாம். ‘கால் டாக்சி’ டிரைவராக-துணிச்சல் மிகுந்த இளைஞராக-காதலியை உயிருக்கும் மேலாக நேசிக்கும் காதலராக- கொலையாளியை தேடி புலனாய்வு செய்பவராக-படம் முழுக்க கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார், அருள்நிதி. காதலிக்காக அவருடைய அப்பாவிடமே வரன் சொல்லும் இடத்தில், கலகல காதலர். அவருக்கும், அஜ்மலுக்கும் நடக்கும் சண்டை காட்சிகள், இருக்கையின் நுனிக்கு இழுத்து வருகின்றன. சிரித்துக் கொண்டே வில்லத்தனம் செய்யும் அழகான வில்லனாக அஜ்மல். சக வில்லன்களுக்கு சரியான போட்டி.

மகிமா நம்பியார் நடிப்பிலும், முகத்திலும் மெருகேறி இருக்கிறது. வில்லனின் மனைவி என்றாலும், கதையை விறுவிறுப்பாக நகர்த்தி செல்லும் அழுத்தமான கதாபாத்திரத்தில் சாயாசிங், துணிச்சல் மிகுந்த எழுத்தாளராக லட்சுமி ராமகிருஷ்ணன், நகைச்சுவை ‘சபலஸ்தராக’ ஆனந்தராஜ், மனைவியை மிரட்டியும் பயமுறுத்தியும் ‘டார்ச்சர்’ செய்யும் கணவராக ஜான் விஜய் என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள். எல்லா கதாபாத்திரங்களுக்கும் சரிசமமான வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மழை பெய்யும் இரவு, அதன் அபாயகரமான அமைதி ஆகியவற்றை கேமரா வழியாக பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங். சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை, மிரட்டியிருக்கிறது.

பெண்களை கடத்தும் கும்பல், கணவர்களிடம் சித்ரவதை அனுபவிக்கும் பெண்கள், அறுபதை கடந்த சபலஸ்தர்கள், அவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் ஆசாமி என பல்வேறு குற்றங்களையும், குற்றவாளிகளையும் முக்கிய கதாபாத்திரங்களாக்கி, மிக நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் கதை சொல்லியிருக்கிறார், புதுமுக டைரக்டர் மு.மாறன். படத்தின் பின்பகுதியில் வரும் திருப்பங்களில், தெளிவு இல்லை.

“போலீசுக்கு தேவை உண்மையான குற்றவாளி இல்லை. எப்.ஐ.ஆர். போட்டு உள்ளே தள்ள ஒரு ஆள்” என்ற வசன வரி, நெற்றியடி.

Next Story