பரியேறும் பெருமாள்


பரியேறும் பெருமாள்
x
தினத்தந்தி 29 Sep 2018 12:08 AM GMT (Updated: 29 Sep 2018 12:08 AM GMT)

சாதி வெறி பற்றி இதற்கு முன்பு பல படங்கள் வெளிவந்திருந்தாலும், அந்த வகை படங்களில் இடம் பெறும் வழக்கமான காட்சிகள் இல்லாத உணர்வுப்பூர்வமான படம் "பரியேறும் பெருமாள்" கதாநாயகன் கதிர், கதாநாயகி ‘கயல்’ ஆனந்தி. டைரக்‌ஷன்: மாரி செல்வராஜ். தயாரிப்பு: பா.ரஞ்சித் படத்தின் விமர்சனம்.

தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம்தான் கதைக்களம். அந்த ஊரை சேர்ந்த கதிரும், பக்கத்து ஊர் ‘கயல்’ ஆனந்தியும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். கதிர், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர். ஆனந்தி, மேல்தட்டு சாதியை சேர்ந்தவர். ஒடுக்கப்பட்ட சாதியின் ஓங்கி ஒலிக்கும் குரலாக உயர வேண்டும் என்று கதிருக்கு ஆசை. இதற்காகவே ‘பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். மேல ஒரு கோடு’ என்று தன்னை வழக்கறிஞருக்கு படிக்கும் மாணவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

அவருக்கு, ஆங்கிலம் சரியாக பேச வரவில்லை. அந்த குறையை போக்க ஆனந்தி முன்வருகிறார். இதுவே இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட காரணமாகிறது. கதிரின் நல்ல குணங்களை பார்த்து ஆனந்திக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. இருவருக்கும் இடையே இருப்பது நட்பா, காதலா? என்று கேள்வி எழும்போது, அதற்கும் மேலே என்ற உறுதியுடன் கதிர், ஆனந்தியுடன் பழகுகிறார்.

ஆனந்திக்குள் கதிர் ஆழமாய் வேரூன்றி விட்டார் என்பதை புரிந்து கொண்ட அவருடைய தந்தை மாரிமுத்து, கதிரை கொலை செய்ய ஏற்பாடு செய்கிறார். அதில் இருந்து கதிர் தப்பி விடுகிறார். அவரை கல்லூரியை விட்டு அனுப்ப சதி செய்கிறார்கள். கல்லூரி முதல்வர் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், அந்த சதித்திட்டத்தில் இருந்து கதிர் தப்புகிறார்.

அவரும், ஆனந்தியும் தங்களுக்குள் இருப்பது நட்பா, காதலா? என்பதை புரிந்து கொண்டார்களா? என்பதும், சாதி வெறியர்கள் என்ன ஆகிறார்கள்? என்பதும் மீதி கதை.

கதிர், கதாபாத்திரத்துடன் ஒன்றியிருக்கிறார். ‘பரியன்’ என்ற கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து இருக்கிறார். இவர், ஆனந்தியிடம் வெள்ளை மனதுடன் பழகுகிற காட்சிகள், இதற்கு உதாரணம். திருமண மண்டபத்துக்குள் அடி-உதை வாங்கி அவமானப்படுத்தப்படும் காட்சியில், அனுதாபத்தை சம்பாதிக்கிறார். அந்த ஊர் பெரியவர் கராத்தே வெங்கடேசுக்கு உதவப்போய், அவர் இவரை கொலை செய்ய முயற்சிக்கும் காட்சி, இருக்கை நுனியில் உட்கார வைக்கிறது.

‘கயல்’ ஆனந்தி காதல் தேவதையாக வசீகரிக்கிறார். பல காட்சிகளில், அவர் கண்களே பேசி விடுகின்றன. காதல் உணர்வுகளை மிக இயல்பாக முகத்துக்கு கடத்துகிறார். யோகி பாபு, கல்லூரி மாணவராக-கதிரின் நண்பராக வந்து போகிறார். ஆனந்தியின் அப்பாவாக மாரிமுத்துவின் நடிப்பும், வசன உச்சரிப்பும் கிராமத்து மனிதரை கண்முன் கொண்டு வருகின்றன. கதிரின் அப்பாவாக வரும் நடிகர், ஆச்சரியப்படுத்துகிற தேர்வு.

ஸ்ரீதரின் கேமரா, கிராமத்து அழகையும், யதார்த்தங்களையும் அப்படியே படம் பிடித்து இருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது. சாதி வெறி பற்றிய கதையை அதன் இயல்பு மாறாமல், அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் மாரி செல்வராஜ். டாஸ்மாக் காட்சியையும், கதிர் குடிக்கிற காட்சிகளையும் தவிர்த்து இருக்கலாம்.

பெண்கள் கழிவறைக்குள் கதிரை தள்ளி கெட்ட பெயர் ஏற்படுத்த வில்லன் முயற்சி செய்வது, ஊர் பெரியவர் கராத்தே வெங்கடேஷ், கதிரை கொலை செய்ய முயற்சித்து, ரெயில் தண்டவாளத்தில் இழுத்து வந்து போடுவது, அவருடைய அப்பாவின் வேட்டியை உருவி ஓட வைப்பது ஆகிய காட்சிகள் மனதை ரணமாக்கும் கொடூரம். ‘கிளைமாக்ஸ்,’ எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது.

Next Story