‘மேஜிக்’ செய்து பணம் சம்பாதிப்பது எப்படி? படம் "பக்கிரி" - விமர்சனம்


‘மேஜிக்’ செய்து பணம் சம்பாதிப்பது எப்படி? படம் பக்கிரி - விமர்சனம்
x
தினத்தந்தி 19 July 2019 4:38 PM GMT (Updated: 19 July 2019 4:38 PM GMT)

தனுஷ் நடித்த ‘ஹாலிவுட்’ படம், ‘பக்கிரி’ என்ற பெயரில் தமிழ் பேசியிருக்கிறது படத்தின் சினிமா விமர்சனம்.

போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் மூன்று இளைஞர்களிடம் தனுஷ் கதை சொல்வது போல் படம் ஆரம்பிக்கிறது. “யாருடைய கதை?” என்று அந்த மூன்று இளைஞர்களும் கேட்க, “என் கதைதான்” என்று தனுஷ் சொல்கிறார்.

அவருக்கு அப்பா யார்? என்று தெரியாது. அம்மாவின் அன்பிலும், அரவணைப்பிலும் வளர்கிறார். சிறுவனாக இருந்தபோதே திருட்டு குற்றத்துக்காக ஜெயிலுக்கு போகிறார். தண்டனை முடிந்து வரும்போது, ஜெயில் வாசலில் அவரை அம்மா வரவேற்கிறார். ‘மேஜிக்’ செய்து பணம் சம்பாதிப்பது எப்படி? என்று தனுஷ் கற்றுக்கொள்கிறார்.

அம்மாவின் மரணத்துக்கு பிறகு தனுஷ் அப்பாவை தேடுகிறார். அவர் பிரான்ஸ் தலைநகரமான பாரீசில் இருப்பதாக அறிகிறார். தனுஷ் அப்பாவை தேடி பாரீஸ் செல்கிறார். அங்கு அவர் அப்பாவை கண்டுபிடித்தாரா, இல்லையா? அவருடைய கதையை கேட்டு மூன்று இளைஞர்களும் திருந்தினார்களா? என்பது மீதி கதை.

தனுசுக்கு தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்த வாய்ப்பு. காதல், மோதல், நகைச்சுவை என சகல உணர்ச்சிகளையும் திரையில் காட்டியிருக்கிறார். ‘பஞ்ச்’ வசனம் மட்டும் இல்லை. பாரீசில் அவர் பலதரப்பட்ட மனிதர்களை சந்திப்பதும், எல்லோருமே பணத்துக்காக வாழ்பவர்கள் என்பதை புரிந்துகொள்வதும், அவர்களிடம் இருந்து கஷ்டப்பட்டு தப்பிப்பதும், சுவாரஸ்யமான காட்சிகள். தனுஷ், மிக இயல்பாக நடித்து இருக்கிறார்.

தனுசை பார்த்து காதல்வசப்படும் ஹாலிவுட் நடிகை எரின் மொரியாட்டி, அழகாக தெரிகிறார். அவருடைய சிரிப்பும், வசன உச்சரிப்பும் வசீகரிக்கிறது. நடிகையாகவே வரும் பெரினைசி பெஜோ சிரிக்க வைக்கிறார். அவர் முன்பு (ராட்சத பெட்டிக்குள் இருந்து) தனுஷ் அறிமுகமாகும் காட்சி, ஆரவாரமான ‘காமெடி.’

வெளிநாடுகள் தொடர்பான காட்சிகளில், ஒளிப்பதிவு வியக்க வைக்கிறது. உதாரணமாக தனுஷ் பாராசூட்டில் பறக்கும் காட்சி. நிக்கோலஸ், அமித் திரிவேதி ஆகிய இருவரின் பின்னணி இசை காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்திருப்பதுடன், கதையுடன் ஒன்றவும் வைக்கிறது.

கென் ஸ்காட் டைரக்டு செய்திருக்கிறார். தனுஷ் சரக்கோடு சரக்காக விமானத்தில் வெளிநாடு போவதும், சட்டையில் கதை எழுதுவதும், நம்பமுடியாத காட்சிகள். அவர் தனக்கு கிடைத்த ஒரு கோடி ரூபாயை ஏழ்மையில் வாடும் அகதிகளுக்கு பிரித்துக் கொடுக்கும் காட்சி, நெகிழவைக்கிறது.

Next Story