சாகப்போகும் குழந்தையை காப்பாற்றி மீண்டும் அந்த சிறுமியின் உயிரை எடுக்கும் எமதர்மனாக வரும் யோகிபாபு படம் "தர்மபிரபு" - விமர்சனம்


சாகப்போகும் குழந்தையை காப்பாற்றி மீண்டும் அந்த சிறுமியின் உயிரை எடுக்கும்  எமதர்மனாக வரும் யோகிபாபு  படம் தர்மபிரபு - விமர்சனம்
x
தினத்தந்தி 19 July 2019 5:21 PM GMT (Updated: 19 July 2019 5:21 PM GMT)

எமலோகத்தில் எமதர்மன் பதவி வகிக்கும் ராதாரவி வயது முதிர்வால் பதவி விலகி புதிய எமனை தேர்வு செய்ய தயாராகிறார். படம் தர்மபிரபு சினிமா விமர்சனம்.

சித்ரகுப்தனாக இருக்கும் ரமேஷ் திலக் எம பதவியை அடைய திட்டமிடுகிறார். ஆனால் ராதாரவி படிப்பறிவு இல்லாத தனது மகன் யோகிபாபுவை எமனாக்கி விடுகிறார். அதன்பிறகு ரமேஷ் திலக் சதியால் யோகிபாபு சிக்கலில் மாட்டி எம பதவியை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவதும், அதில் இருந்து மீண்டு பதவியை தக்கவைத்தாரா? என்பதும் மீதி கதை.

எமதர்மனாக வரும் யோகிபாபு சென்னை பாஷை பேசி சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார். மேல் லோகத்தில் திருவள்ளுவர் நடத்தும் வகுப்பறையில் தூங்கி கேள்விகளுக்கு தவறாக பதில் சொல்வது, எமனாக பதவி ஏற்று பாவம் செய்தவர்களை வித்தியாசமான யோசனையால் பிரித்து தண்டிப்பது, பதவியை தக்க வைக்க சொர்க்கத்தில் இருக்கும் காந்தி, அம்பேத்கர், பெரியார், நேதாஜி ஆகியோரை அழைத்து ஆலோசனை கேட்பது சுவாரஸ்யங்கள்.

பூலோகத்துக்கு வந்து சாகப்போகும் குழந்தையை காப்பாற்றுவதிலும் மீண்டும் அந்த சிறுமியின் உயிரை எடுக்கும் நிர்ப்பந்தத்தில் தவிப்பதிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ரமேஷ் திலக் பதவி ஆசையில் செய்யும் தகிடுதத்தங்கள் ரசிக்க வைக்கின்றன. சாதி சங்கத் தலைவராக வரும் அழகம் பெருமாள் குரூரம் காட்டுகிறார். ராதாரவி, ரேகா ஆகியோர் அனுபவ நடிப்பால் கவர்கிறார்கள். சாமியாராக வரும் கயல் தேவராஜ், சிவனாக வரும் நான் கடவுள் ராஜேந்திரன், போஸ்வெங்கட் கதாபாத்திரங்களும் நிறைவு.

சில காட்சிகளில் நாடகத்தனம் தெரிகிறது. நகைச்சுவை, அரசியல் கலவையில் திரைக்கதையை கலகலப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் முத்துக்குமரன்.

கள்ளக்காதலில் குழந்தைகளை கொன்ற தாய், குரூரமான சாதி தலைவர், விவசாயிக்கு தொல்லை கொடுக்கும் வங்கி அதிகாரி ஆகியோரை தற்கால நிகழ்வுகளோடு பொருத்தி எமலோகத்தில் தண்டிப்பது கவனிக்க வைக்கிறது.

ஜஸ்டின் பிரபாகர் பின்னணி இசை பலம். விஜி சதீஷின் கேமரா எமலோகத்தை கண்முன் நிறுத்துகிறது.

Next Story