காதலுக்கு குறுக்கே நிற்கும் சாதி: படம் ஏ-1 - விமர்சனம்


காதலுக்கு குறுக்கே நிற்கும் சாதி: படம்  ஏ-1 - விமர்சனம்
x
தினத்தந்தி 28 July 2019 11:00 PM GMT (Updated: 28 July 2019 11:00 PM GMT)

நண்பர்களுடன், ‘சரக்கு’ அடித்து விட்டு மட்டையாகிப் போகிற சராசரி இளைஞர், சந்தானம். படம் "ஏ-1" சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  ரவுடிகளிடம் மாட்டிக்கொண்ட பிராமண பெண் தாரா அலிஷாவை நெற்றியில் நாமம் போட்ட சந்தானம் காப்பாற்றுகிறார். அவரை பிராமணராக கருதி காதல்வசப்படுகிறார், தாரா அலிஷா. சந்தானம் பிராமணர் அல்ல என்பது தெரிந்ததும், அவர் மீதான காதலை முறித்துக் கொள்கிறார்.

அவருடைய தந்தை யாட்டின் கார்யேகர் நடுரோட்டில் நெஞ்சுவலி வந்து மயங்கி விழுகிறார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரை காப்பாற்றுகிறார், சந்தானம். அவர் மீது தாரா அலிஷா மீண்டும் காதல்வசப்படுகிறார். அவரை நம்பி சந்தானம் தனது தாய்-தந்தையுடன் பெண் கேட்க போகிறார். அவரையும், குடும்பத்தினரையும் யாட்டின் கார்யேகர் அவமானப்படுத்தி வீட்டைவிட்டு வெளியேற சொல்கிறார்.

அன்று இரவு சந்தானம் அதிகமாக குடித்துவிட்டு, “யாட்டின் கார்யேகரை கொலை செய்யப் போவதாக உளறுகிறார். அவர் போதை தெளியும்போது, “உனக்காக உன் மாமனாரை கொன்று விட்டோம்” என்று அவருடைய நண்பர்கள் ஜம்பம் அடிக்கிறார்கள். சந்தானம் அதிர்ச்சி அடைகிறார். மாமனார் சாவில் ஏற்படும் சந்தேகங்களை சந்தானம் எப்படி சமாளிக்கிறார்? என்பது மீதி கதை.

நகைச்சுவை நாயகனாக சந்தானம் தனது கொடியை உயரே பறக்க விட்டு இருக்கிறார். அவர் பேசுகிற ஒவ்வொரு வரியிலும் தியேட்டர் அதிர்கிறது. தாரா அலிஷா மீது அவர் காதல்வசப்படும்போதும், அந்த காதல் முறிந்ததும் அதுபற்றி கவலைப்படாமல் அதை சுலபமாக எடுத்துக் கொள்ளும்போதும், மாமனாரின் மரண சந்தேகங்களை பேசி சமாளிக்கும்போதும், நகைச்சுவையே உன் பெயர் சந்தானமா? என்று கேட்க தோன்றுகிறது.

கதாநாயகி தாரா அலிஷா, புதிய கண்டுபிடிப்பு. புதுமுகம் என்பது தெரியாத அளவுக்கு நடிப்பிலும், அழகிலும், பாஸ் மார்க். சந்தானத்தின் அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர். இவர், குடிபோதையில் போலீஸ் அதிகாரி சாய்குமாரை வாட்ச்மேன் என்று கருதி, தன்னைப் பற்றியும், மகன் சந்தானம் பற்றியும் பேசி, உளறும் காட்சியில், ஆரவாரம். சந்தானத்தின் நண்பர்களாக வரும் டி.வி. நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து, படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள். மொட்டை ராஜேந்திரன் ‘காமெடி’ எடுபடவில்லை.

சந்தோஷ் நாராயணன் இசையில், பாடல்கள் நினைவில் இல்லை. பின்னணி இசை, கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு, பசுமை புரட்சி. வசன காமெடியில், வரிக்கு வரி சிரித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அந்த குறையை நிறைவு செய்து இருக்கிறது, ‘ஏ-1.’ ‘கிளைமாக்ஸ்’ காட்சியை முன்கூட்டியே யூகிக்க முடிவது, படத்தின் ஒரே பலவீனம்.

Next Story