விமர்சனம்
பொட்டல் காடும், அந்த காடு சூழ்ந்த வனப்பகுதியும்: தொரட்டி - விமர்சனம்

பொட்டல் காடும், அந்த காடு சூழ்ந்த வனப்பகுதியும்: தொரட்டி - விமர்சனம்
ஷமன் மித்ரு சத்யகலா பி.மாரிமுத்து ஜித்தன் ரோ‌ஷன் குமார் ஸ்ரீதர்
தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறை வந்து கொண்டிருந்த தரமான கதையம்சம் கொண்ட படங்கள், இப்போதெல்லாம் அடிக்கடி வந்து இன்ப அதிர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன. அந்த வரிசையில் இப்போது, ‘தொரட்டி.’ படத்தின் விமர்சனம் .
Chennai
பொட்டல் காடும், அந்த காடு சூழ்ந்த வனப்பகுதியும்தான் கதைக்களம். விவசாய நிலத்துக்கு இயற்கை உரமாக ஆடுகளின் கழிவுகளை பயன்படுத்துகிற கிராமவாசிகளும், அதற்காக ஆட்டுக்கிடை போடும் தொழில் செய்து வரும் அப்பாவி மக்களும்தான் இந்த படத்தின் கதாபாத்திரங்கள்.

1980களில் பல படங்களில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக சண்டை போட்டுக் கொண்டிருந்த அழகு (நல்லய்யா கதாபாத்திரத்தில்) ‘அப்பா’ வேடத்துக்கு வந்து இருக்கிறார். இவருடைய மகன் மாயன். இருவரும் சேர்ந்து ஆட்டுக்கிடை போட்டு, அதன் மூலம் கிடைக்கிற பணத்தில்தான் பசியை போக்குகிறார்கள். இந்த நிலையில், அந்த ஊருக்குள் மூன்று திருடர்கள் நுழைகிறார்கள். திருடுவதை தொழிலாக கொண்ட அவர்கள், குறுக்கே யார் வந்தாலும் கழுத்தை அறுக்கும் கொலை பாதகத்துக்கு அஞ்சாதவர்கள்.

அந்த திருடர்களுடன் நட்பு வைத்து, குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆகிறான், மாயன். அவனுக்கு நெருங்கிய உறவினர் கூட பெண் கொடுக்க மறுக்கிறார்கள். மாயன் மீது காதல் கொண்ட செம்பொண்ணு, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி, அவனை மணந்து கொள்கிறாள். கணவன் மாயனின் குடிப்பழக்கத்தை மறக்க செய்கிறாள்.

இந்த சூழ்நிலையில், அந்த கிராமத்தின் வசதியான புள்ளியான துபாய்க்காரர் வீட்டில், அவருடைய மகளுக்கு திருமணம் நடக்கிறது. திருடர்கள் மூன்று பேரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, பெண்களிடம் நகைகளை கொள்ளை அடிக்கிறார்கள். அவர்களை போலீஸ் கைது செய்வதற்கு செம்பொண்ணு உதவுகிறாள். அவளை, ஜெயிலில் இருந்து வந்ததும் கொலை செய்வது என்று மூன்று திருடர்களும் முடிவு செய்கிறார்கள். அவர்களிடம் செம்பொண்ணு சிக்கினாளா, இல்லையா? என்பது உயிரை உலுக்கும் ‘கிளைமாக்ஸ்.’

படத்தின் மிக சிறந்த அம்சமே மண்ணின் மைந்தர்களாக மாறியிருக்கும் நடிகர்-நடிகைகள்தான். மாயனாக வரும் ஷமன் மித்ரு, செந்தட்டியாக வரும் சுந்தர்ராஜ், சோத்து முட்டியாக வரும் முத்துராமன், நல்லய்யாவாக வரும் அழகு, பேச்சியாக வரும் ஜானகி, விஜய் பாலாஜியாக வரும் துபாய்க்காரர், தலையாரியாக வரும் மாரியப்பன் என நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரங்களுக்காகவே பிறந்தவர்கள் போல் அத்தனை பொருத்தம். செம்பொண்ணுவாக வரும் சத்யகலா, நல்ல தேர்வு. கிராமத்து தேவதையாகவே மாறியிருக்கிறார்.

குமார் ஸ்ரீதரின் ஒளிப்பதிவும், ஜித்தன் ரோஷனின் பின்னணி இசையும் காட்சிகளை உயிரோட்டமாக நகர்த்துகின்றன. பாடல்களை பின்னணியில் ஒலிக்க விட்டதில், டைரக்டர் மாரிமுத்துவின் ரசனை தெரிகிறது. இடைவேளை வரை திரைக்கதையில் வேக குறைவு. இடைவேளைக்குப்பின், கதை வேகம் பிடிக்கிறது. உச்சக்கட்ட காட்சி, கனத்த சோகம். படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது, இரண்டு மணி நேரம் ஒரு குக்கிராமத்துக்குள் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது, ‘தொரட்டி.’

முன்னோட்டம்

கால்ஸ்

ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 26, 06:01 AM

குட்டி லவ் ஸ்டோரி

தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.

பதிவு: பிப்ரவரி 15, 02:29 AM

ட்ரிப்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 05, 10:06 PM
மேலும் முன்னோட்டம்