கூலிக்கு கொலை செய்யும் இளைஞனும், அவனை பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதியும் - மகாமுனி விமர்சனம்


கூலிக்கு கொலை செய்யும் இளைஞனும், அவனை பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதியும் - மகாமுனி விமர்சனம்
x
தினத்தந்தி 13 Sep 2019 3:58 PM GMT (Updated: 13 Sep 2019 3:58 PM GMT)

ஆர்யா, இரண்டு வேடங்களில் நடித்த படம். கூலிக்கு கொலை செய்யும் இளைஞனும், அவனை பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதியும். படம் மகாமுனி சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  ஆர்யா, இரண்டு வேடங்களில் நடித்த படம். இருவரும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு பிறந்தவர்கள். இரண்டு மகன்களையும் அவர்கள் சின்ன வயதாக இருக்கும்போதே மனநிலை பாதிக்கப்பட்ட தாய் பிரிந்து சென்று விடுகிறார். ஒரு ஆர்யா (மகா) கூலிக்கு கொலை செய்பவர்களுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டு கொடுப்பவர். இவருடைய மனைவி, இந்துஜா. இருவருக்கும் ஐந்து வயதில் மகன் இருக்கிறான்.

இன்னொரு ஆர்யா (முனி) திருமணம் ஆகாதவர். ஆன்மிகத்தில் ஈடுபாடு உடையவர். வேட்டி-சட்டை, நெற்றி நிறைய விபூதி அணிந்த ஆசிரியர். இவருடைய வளர்ப்பு தாய், ரோகிணி. ஒருதலையாக காதலிப்பவர், மகிமா நம்பியார். ‘மகா’ ஆர்யா, அரசியல்வாதி இளவரசுவிடம் அடியாளாக இருக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில், அவரை கொலை செய்ய இளவரசு ஆட்களை அனுப்புகிறார். அந்த கொலை சதியில் இருந்து ஆர்யா தப்புகிறார்.

‘முனி’ ஆர்யாவை மகள் மகிமா நம்பியார் விரும்புவது, அப்பா ஜெயப்பிரகாசுக்கு பிடிக்கவில்லை. ஆர்யாவை கொல்வதற்கு சதி செய்கிறார். அவரிடம் இருந்து ஆர்யா தப்பினாரா, இல்லையா? என்பது ‘கிளைமாக்ஸ்.’

மகா, முனி ஆகிய 2 வேடங்களுக்கும் நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார், ஆர்யா. இளவரசுவை முழுமையாக நம்புகிற அடியாளாக- ‘மகா’ஆர்யா வரும் காட்சிகளில், நிமிர்ந்து உட்கார வைக்கிறார். இவர் முதுகில் கத்திக்குத்து வாங்குவதும், அந்த கத்தியை முதுகில் இருந்து எடுக்கும்போதும், இதுவரை பார்த்திராத ஆர்யா. ‘மகா’விடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட அப்பாவி ஆசிரியர் முனியாக அனுதாபம் சம்பாதிக்கிறார். ஜெயப்பிரகாசின் சதியால் பாம்பிடம் கடி வாங்குகிற காட்சியில், அய்யோ பாவமாக மாறுகிறார்.

ஊடக துறை மாணவியாக மகிமா நம்பியார், திறமையை காட்ட சந்தர்ப்பம். போர் குணம் கொண்ட அந்த கதாபாத்திரம், மகிமா நம்பியாருக்கு முற்றிலும் புதுசு. அனுபவ நடிப்பால், கவனம் ஈர்க்கிறார். ‘மகா’ஆர்யாவின் மனைவியாக-ஒரு பையனுக்கு தாயாக இந்துஜா. கணவர் மீதான கோபம், ஊடல், கூடல், மகன் மீது காட்டும் பாசம் என ஒரு நடுத்தர வர்க்க பெண்ணை கண்முன் நிறுத்துகிறார். கணவரை போலீஸ் பிடித்து செல்லும்போதும், மகனுடன் பஸ்சில் அழுது கொண்டே செல்லும்போதும், போலீஸ் அதிகாரியின் சபலத்துக்கு அடிபணியாமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும்போதும், உருக்கமாக நடித்து இருக்கிறார்.

இளவரசு, ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர் என அனைத்து நடிகர்களும், அவர்களின் கதாபாத்திரங்களும் உயிரோட்டமானவை. அருள் பத்மநாபனின் ஒளிப்பதிவை படத்தின் இன்னொரு கதாநாயகன் என்று சொல்லலாம். காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்து இருக்கிறது, ஒளிப்பதிவு. எஸ்.எஸ்.தமன் இசையில் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது.

சாந்தகுமார் டைரக்‌ஷனில், படத்தின் முதல் பாதி அதிக கவனம் பெறாமல், குறைந்த வேகத்துடன் கடந்து செல்கிறது. இரண்டாம் பாதி, அதிவேகத்துடன் பயணிக்கிறது. உயிரை உறைய வைக்கும் அதிரடி காட்சிகளும், எதிர்பாராத திருப்பங்களும் பாலாவின் ஆரம்ப கால படங்களை நினைவூட்டுகின்றன.

Next Story