முறை மாப்பிள்ளைக்கும், முறை பெண்ணுக்கும் இடையேயான காதல் யுத்தம் படம் 100 சதவீத காதல் - விமர்சனம்


முறை மாப்பிள்ளைக்கும், முறை பெண்ணுக்கும் இடையேயான காதல் யுத்தம் படம் 100 சதவீத காதல் - விமர்சனம்
x
தினத்தந்தி 7 Oct 2019 12:27 AM GMT (Updated: 7 Oct 2019 12:27 AM GMT)

ஜீ.வி.பிரகாஷ்குமாரும், ஷாலினி பாண்டேயும் அத்தை மகன்-மாமா மகள். இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். வகுப்பில் முதல் மாணவராக இருக்கிறார், ஜீ.வி.பிரகாஷ். அதில், அவருக்கு பெருமை. படம் 1"00 சதவீத காதல்" விமர்சனம்.

கதையின் கரு:   ஒரு தேர்வில் ஷாலினி பாண்டே இரவு-பகலாக படித்து முதல் மாணவியாக வந்து விடுகிறார். அங்கே ஆரம்பிக்கிறது, இருவருக்குமான “நீயா-நானா?” யுத்தம்.

ஷாலினி பாண்டேயை உயிருக்கு உயிராக காதலிக்கும் ஜீ.வி.பிரகாஷ், அவர் மீது காதலே இல்லாதது போல் நடந்து கொள்கிறார். பதிலுக்கு ஷாலினி பாண்டேயும் ஜீ.வி.பிரகாசை வெறுப்பது போல் நடந்து கொள்கிறார். இவர்கள் இடையே நடைபெறும் காதல் யுத்தத்தில், யுவன் மயில்சாமி வகுப்பில் முதல் மாணவராக வந்து விடுகிறார். அவரை காதலிப்பது போல் ஷாலினி பாண்டே நடிக்கிறார். பதிலுக்கு ஷிவானி பட்டேலை காதலிப்பது போல் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிறார். 2 ஜோடிகளுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. இந்த நிலையில், நீண்ட பல வருடங்களாக பிரிந்து வாழ்கிற தாத்தா நாசரும், பாட்டி ஜெயசித்ராவும் இணைகிறார்கள். இருவருமே தங்கள் பேரன் ஜீ.வி.பிரகாசுக்கும், பேத்தி ஷாலினி பாண்டேவுக்கும் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள். அவர்களின் ஆசை நிறைவேறியதா, இல்லையா? என்பதே ‘100 சதவீத காதல்.’ கல்லூரி மாணவர்-மாணவியாக ஜீ.வி.பிரகாசும், ஷாலினி பாண்டேயும் பொருந்துகிறார்கள். இருவருக்கும் இடையேயான காதலும், மோதலும் ரசிக்கும்படி அமைந்து உள்ளன. இவர்களுக்குள் ஏற்படும் மோதலில் யுவன் மயில்சாமி குறுக்கே வருவது, எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகின்றன.

ஜீ.வி.பிரகாஷ் காதல் மற்றும் அது தொடர்பான மோதல் காட்சிகளில், நூறு சதவீதம் பிரகாசிக்கிறார். ஷாலினி பாண்டேவுக்கு வட இந்திய முகம். நடிப்புடன், கவர்ச்சியையும் வெளிப்படுத்துகிறார். பரீட்சை எழுதும்போது விடைகளை தனது இடுப்பில் எழுதி, ஜீ.வி.பிரகாசுக்கு உதவுவது ஒரு உதாரண காட்சி. யுவன் மயில்சாமி, கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்து இருக்கிறார். தாத்தாவாக நாசர், பாட்டியாக ஜெயசித்ரா, ஜீ.வி.பிரகாசின் தந்தையாக ‘தலைவாசல்’ விஜய், தாயாக ரேகா, ஷாலினி பாண்டேயின் தந்தையாக ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் கதாபாத்திரங்களாக நினைவில் நிற்கிறார்கள். இவர்களுடன் ஏராளமான குழந்தை நட்சத்திரங்களும் பங்கு பெறுகிறார்கள். அவர்களின் குறும்பும், சேட்டைகளும் கலகலப்பூட்டுகின்றன. வெளிநாட்டில் இருந்து வரும் மாமா தம்பி ராமய்யா, வேலைக்காரர் அப்புக்குட்டி, மனோபாலா, சாம்ஸ் ஆகியோர் அவரவர் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள்.

ஜீ.வி.பிரகாசே இசையமைத்து இருக்கிறார். பின்னணி இசையில், அவர் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். படம் பார்ப்பவர்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை சிரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இயக்கியிருக்கிறார், டைரக்டர் சந்திரமவுலி. அவருடைய முயற்சியில், பாதி வெற்றி பெற்று இருக்கிறார். படத்தின் முதல் பாதி, நீளம் நீளமான வசனங்களுடன் மந்தமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் விறுவிறுப்பான கதையோட்டம்.

Next Story