அப்பாவை கொன்றவனை பழிவாங்கும் மகனின் கதை பட்டாஸ்


அப்பாவை கொன்றவனை பழிவாங்கும் மகனின் கதை பட்டாஸ்
x
தினத்தந்தி 18 Jan 2020 7:06 AM GMT (Updated: 18 Jan 2020 7:06 AM GMT)

-

‘அடி முறை’ என்ற தற்காப்பு கலையின் குரு, நாசர். இவருடைய சிஷ்யன் தனுஷ். குருவிடம் மரியாதையாகவும், விஸ்வாசமாகவும் இருக்கிறார். நாசரின் மகன் நவீன் சந்திரா, தந்தை நாசரின் தற்காப்பு கலை மீது ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். அதோடு நாசரின் நம்பிக்கைக்கு உரிய சிஷ்யனாக தனுஷ் இருப்பது, மகன் நவீன் சந்திராவுக்கு பிடிக்கவில்லை.

சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து தந்தை நாசரையும், சிஷ்யன் தனுசையும் வில்லன் நவீன் சந்திரா கொன்று விடுகிறார். தனுசின் மனைவி சினேகாவையும், ஆண் குழந்தை (குட்டி தனுஷ்)யையும் கொல்ல முயற்சி செய்கிறார். அவரின் கொலை வெறியில் இருந்து சினேகாவும், மகன் தனுசும் தப்புகிறார்கள். ஒரு கொலை வழக்கில் சிக்கி, சினேகா ஜெயிலுக்கு போகிறார். மகன் தனுஷ் ஒரு திருடனிடம் திருடனாக வளர்கிறார்.

தண்டனை காலம் முடிந்து ஜெயிலில் இருந்து திரும்புகிற சினேகா, திருடனாக இருக்கும் மகனை அடையாளம் கண்டுகொள்கிறார். அதேபோல் அவருடைய மகன் தனுசும் அம்மாவை அடையாளம் காண்கிறார். 2 பேரும் சேர்ந்து வில்லன் நவீன் சந்திராவை எப்படி பழிவாங்கு கிறார்கள்? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

அப்பா, மகன் ஆகிய 2 வேடங்களில் தனுஷ். அப்பா வேடத்தில், ‘அடிமுறை’ கலையின் வீரராக எதிரிகளை தெறிக்க விடுகிறார். அவருக்கும், சினேகாவுக்கும் ஜோடி பொருத்தம், கச்சிதமாக அமைந்து இருக்கிறது. மகன் தனுஷ் சின்ன சின்ன திருட்டுகளையும், வழிப்பறியையும் செய்கிற திருடராக தமாசாக அறிமுகம் ஆகிறார். தனது கைத்தடியாக சதீசை சேர்த்துக்கொண்டு ‘காமெடி’ செய்கிறார். அம்மாவை அடையாளம் கண்டுகொள்வதில் இருந்து தமாசான அவர், ‘சீரியஸ்’சுக்கு மாறுகிறார்.

அடிமுறை கலையில் அப்பா, மகன் ஆகிய 2 வேடங்களிலும் தனுஷ், அமர்க்களம். அவருடைய மனைவியாக சினேகாவுக்கு கனமான வேடம். ஜெயில் தொடர்பான காட்சிகளிலும், கணவரை கொன்றவனை பழிவாங்குவதற்காக அவனை பின்தொடரும் காட்சிகளிலும், அனுபவப்பட்ட நாயகியாக தனது முத்திரையை பதிவு செய்திருக்கிறார். ஒப்பனை இல்லாமலே அவருடைய முகம், வசீகரம். சண்டை காட்சிகளில், இது சினேகாதானா? என்று ஆச்சரியப்பட வைக்கிறார், சிரிப்பழகி.

அப்பாவுக்கு ஒரு ஜோடி இருக்கும்போது, மகனுக்கும் ஜோடி வேண்டும் என்ற எழுதப்படாத விதிமுறையின்படி, மெஹ்ரினை இன்னொரு நாயகியாக நடிக்க வைத்து இருக்கிறார்கள். அவருடைய முகத்தில், மும்பை வாசனை. ‘இன்னொரு நாயகி’ என்ற இரண்டாம்பட்சமாகவே தெரிகிறார்.

நாசர் இதுபோன்ற குரு வேடங்களில் சில படங்களில் நடித்திருந்தாலும், ‘முத்தையா ஆசான்’ ஆக வாழ்ந்திருக்கிறார். வில்லன் நவீன் சந்திராவுக்கு ஆத்திரமும், ஆவேசமும் போதாது. அப்பாவையே போட்டுத்தள்ளுகிற கதாபாத்திரத்தில், மிரட்டியிருக்க வேண்டாமா? முனீஷ்காந்தை விட, ‘பஞ்சர்’ என்று அழைக்கப்படுகிற சதீஷ் நகைச்சுவை சிரிக்க வைக்கிறது.

ஓம் பிரகாசின் ஒளிப்பதிவு, படம் முழுக்க காட்சிகளின் தன்மை புரிந்து, கதையோட்டத்துக்கு வேகம் சேர்த்து இருக்கிறது. விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசை, ‘டைட்டிலில்’ மட்டும் மெல்லிசையாக இதயம் தொடுகிறது.

துரை செந்தில்குமார் டைரக்டு செய்து இருக்கிறார். படத்தின் ஆரம்ப காட்சிகள் எந்தவித கவன ஈர்ப்பும் இல்லாமல், மெதுவாக நகர்கின்றன. இடைவேளைக்கு 15 நிமிடங்கள் இருக்கும்போது, கதை வேகம் பிடிக்கிறது. இறுதிவரை அந்த வேகம் குறையாத காட்சிகள். அப்பா தனுஷ் தீக்கிரையாகும் காட்சியிலும், மகன் தனுஷ் கலந்து கொள்ளும் உச்சகட்ட காட்சியிலும் இருக்கை நுனியில் அமரவைக்கும் பதற்றம். தனுஷ் ரசிகர்களுக்கு இனிப்பு பொங்கல்.

Next Story