சேரன் போலீஸ் அதிகாரியின் தீர்க்கத்தையும், தந்தையின் பாசத்தையும் காட்டும் படம் ராஜாவுக்கு செக் - விமர்சனம்


சேரன் போலீஸ் அதிகாரியின் தீர்க்கத்தையும், தந்தையின் பாசத்தையும் காட்டும் படம் ராஜாவுக்கு செக் - விமர்சனம்
x
தினத்தந்தி 26 Jan 2020 7:49 PM GMT (Updated: 26 Jan 2020 7:49 PM GMT)

சேரனும், சரயுவும் கணவன், மனைவி. இவர்கள் மகள் நந்தனா. சேரன் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். படம் ராஜாவுக்கு செக் விமர்சனம் பார்க்கலாம்.

போலீஸ் அதிகாரியான சேரனுக்கு அதிக நேரம் தூங்கும் வியாதி. இதனால் மனகசப்பாகி பிரியும் மனைவி விவாகரத்து கேட்கிறார். மகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கவும் விரும்புகிறார்.

பத்து நாட்கள் மகளை தன்னுடன் வசிக்க அனுமதித்தால் விவாகரத்துக்கு சம்மதிக்கிறேன் என்கிறார் சேரன். அதை மனைவியும் ஏற்கிறார். 9 நாட்களை மகிழ்ச்சியாக கடத்துகிறார்கள். கடைசி நாளில் விபரீதம் நடக்கிறது. மகள் கடத்தப்படுகிறாள். அவளை பாலியல் ரீதியாக சீரழிக்க 3 பேர் திட்டமிடுகின்றனர். சேரன் நிலைகுலைந்து போகிறார்.

அவர்களிடம் இருந்து மகளை காப்பாற்றினாரா? என்பது கிளைமாக்ஸ்.

சேரன் நுணுக்கமான போலீஸ் அதிகாரியாகவும், பாசமான தந்தையாகவும் வருகிறார். பிரிந்து போக விரும்பும் மனைவியால் வேதனை, மகளோடு சில நாட்கள் வாழவேண்டும் என்ற ஏக்கத்தை நீதிபதி முன்னால் வெளிப்படுத்தும் ஆரம்ப காட்சியிலேயே மனதில் இறங்குகிறார். வக்கிர வில்லன்களிடம் மகள் சிக்கிய பிறகு அவள் நிலையை எண்ணி பதறும்போது காட்சிக்கு காட்சி உருக வைக்கிறார்.

போலீஸ் அதிகாரியின் தீர்க்கத்தையும், தந்தையின் பாசத்தையும் கலவையாக கொடுத்து சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சரயு வந்து போகிறார். மாடலிங் பெண்ணாக வரும் சிருஷ்டி டாங்கே சிறிது நேரம் வந்தாலும் நிறைவு. மகளாக வரும் நந்தனா கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளார். ஆனால் தாய், தந்தை பிரியும் வேதனை முகத்தில் இல்லை.

வில்லனாக வரும் இர்பான் பார்வையாலேயே மிரட்டுகிறார். ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை, வில்லன் வரவுக்கு பின் வேகம் எடுக்கிறது. சமூக வலைத்தள காதலில் சிக்கி ஏமாறும் இளம் பெண்ணின் வாழ்க்கையை பின்புலமாக வைத்து காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் சாய்ராஜ்குமார். வினோத் எஜமானியாவின் பின்னணி இசை காட்சியோடு ஒன்ற வைக்கிறது. எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும் பக்க பலம்.

Next Story