பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9


பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9
x
தினத்தந்தி 12 Sep 2021 9:15 AM GMT (Updated: 2021-09-12T14:45:08+05:30)

பாஸ் அண்ட் பியூரியஸ் 9-வது பாகத்தில் நாயகன் வின் டீசல் தனது குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

பாஸ் அண்ட் பியூரியஸ் 9-வது பாகத்தில் நாயகன் வின் டீசல் தனது குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகிறார். அப்போது ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்று சொல்லி வேலை வருகிறது. இதற்காக பழைய கூட்டாளிகள் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். அந்த பொருளின் பாதி பாகத்தை வின் டீசலுக்கும் முன், ஜான் சீனா எடுத்து விடுகிறார்.

இறுதியில் மீதிப் பாகத்தையும், ஜான் சீனா எடுத்த பாகத்தையும் வின் டீசல் தன் கூட்டாளிகளுடன் இணைந்து எப்படி எடுக்கிறார்? ஜான் சீனா யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 8 பாகங்களை தொடர்ந்து 9வது பாகம் தற்போது வெளியாகி இருக்கிறது. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படங்கள் என்றாலே அழகான கார்கள், சேஸிங் காட்சிகள், பிரம்மாண்ட சண்டைக்காட்சிகள் என ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். அதுபோல் இந்த பாகத்திலும் இவை அனைத்தும் இருந்தாலும், கொஞ்சம் ஓவராக இருப்பதுபோல் தோன்றுகிறது.

வின் டீசல் வழக்கம் போல் அலட்டல் இல்லாத நடிப்பை கொடுத்து இருக்கிறார். ஜான் சீனாவின் உடலமைப்பும், நடிப்பும் சிறப்பு. மற்ற கதாபாத்திரங்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். அதுபோல், மற்ற பாகங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை ஒருசில காட்சிகளுக்கு வரவைத்து நியாபகப்படுத்துவது ரசிக்கும்படி இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 3, 4, 5, 6 பாகங்களை இயக்கிய ஜஸ்டின் லின் இந்த பாகத்தை இயக்கி இருக்கிறார். திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தாலும் ஆங்காங்கே சற்று சோர்வை ஏற்படுத்துகிறது. பிளாஸ்பேக் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

படத்தின் பின்னணி இசையில் ப்ரெயின் டெய்லர் மிரட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளுக்கு ஏற்ப அவரது பின்னணி இசை ரசிக்கும் படியாக இருக்கிறது. ஸ்டீபன் எஃப்.விண்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளை எடுக்க ஸ்டீபன் கடுமையாக உழைத்திருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.

மொத்தத்தில் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9’ வேகம் குறைவு.

Next Story