உடலுறுப்புத் திருட்டு: ‘விசித்திரன்' சினிமா விமர்சனம்


உடலுறுப்புத் திருட்டு: ‘விசித்திரன் சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 6 May 2022 1:20 PM GMT (Updated: 2022-05-06T18:50:47+05:30)

மருத்துவத்தை சுற்றி நடக்கும் தொழில்களால் மனித உயிர்கள் பாதிக்கப்படுவதை திரைக்கதை மூலம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். உடலுறுப்புத் திருட்டை எமோஷனல் திரில்லர் பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

டைரக்டர் பாலாவின் சொந்த படம், இது. கேரளாவில் வெற்றிகரமாக ஓடிய ‘ஜோசப்’ என்ற மலையாள படத்தின் தமிழ் வடிவம்.

ஆர்.கே.சுரேஷ் சாதாரண போலீஸ்காரராக இருந்தாலும், துப்பறிவதில் மன்னன். எந்த ஒரு மர்ம கொலையாக இருந்தாலும், மிகத் துல்லியமாக துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிப்பதில் கில்லாடி. அப்பேர்பட்ட திறமைசாலியான அவர், குடிபோதைக்கு அடிமையாகிறார். காலையில் விழித்தது முதல் இரவு தூங்கப்போவது வரை குடித்துக்கொண்டே இருக்கிறார்.

அவர் குடிகாரராக மாறுவதற்கு காரணம் என்ன? என்பதற்கு ‘பிளாஷ்பேக்’கில் விளக்கம் சொல்லப்படுகிறது. அவரும், அதே ஊரை சேர்ந்த மதுசாலினியும் காதல்வசப்படுகிறார்கள். ஆர்.கே.சுரேஷ் ஊரில் இல்லாதபோது, மதுசாலினிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து விடுகிறது. ஆர்.கே.சுரேஷ் பூர்ணாவை மணந்து கொள்கிறார்.

இந்த நிலையில், மதுசாலினி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். விசாரணைக்கு சென்ற ஆர்.கே.சுரேஷ், காதலி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதிர்ச்சியில் இருந்து விடுபட முடியாத அவரை, மனைவி பூர்ணா சந்தேகித்து, சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து போய்விடுகிறார்.

இருவருக்கும் பிறந்த மகள் விபத்தில் இறந்து போக, அவளை தொடர்ந்து மனைவி பூர்ணாவும் விபத்துக்குள்ளாகி மரணம் அடைகிறார். அவருடைய மரணத்தில் ஆர்.கே.சுரேசுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. விசாரணையில் பூர்ணா விபத்தில் மரணம் அடையவில்லை என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவருகிறது.

கொலையாளி யார்? என்பதும், கொலைக்கான காரணம் என்ன? என்பதையும் ஆர்.கே.சுரேஷ் கண்டுபிடிக்கிறார்.

கணவன், மனைவி இருவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்க, கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிக்க உயர் போலீஸ் அதிகாரி, ‘கான்ஸ்டபிள்’ ஆர்.கே.சுரேஷ் உதவியை நாடுவது போல் படம் தொடங்குகிறது.

முகத்தில் தாடி, மீசையுடன் சோகம், குடித்து குடித்து கலங்கிப்போன கண்கள், நடையில் தள்ளாட்டம் சகிதம் அசல் குடிகாரரை திரையில் பதிவு செய்து இருக்கிறார், ஆர்.கே.சுரேஷ். மகளை ஆஸ்பத்திரி படுக்கையில் பார்த்து கதறி அழும் காட்சியில், பார்வையாளர்களையும் கலங்க வைக்கிறார், ஆர்.கே.சுரேஷ். அவருடைய துப்பறியும் பாணியில், புத்திசாலித்தனமான போலீஸ் தெரிகிறார்.

ஆர்.கே.சுரேசின் காதலியாக மதுசாலினி, மனைவியாக பூர்ணா இருவருக்கும் அதிக காட்சிகள் இல்லையென்றாலும், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். இளவரசு, மாரிமுத்து இருவரும் போலீஸ்காரர்களாக- ஆர்.கே.சுரேசின் நண்பர்களாக வருகிறார்கள்.

எம்.பத்மகுமார் டைரக்டு செய்து இருக்கிறார். திரைக்கதையில் வேகம் போதாது. காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. நல்ல கதை, திறமையான நடிப்பு, ஆர்வத்தை தூண்டும் (ஜீ.வி.பிரகாஷ்) பின்னணி இசை ஆகிய அம்சங்கள், சிறப்பு.


Next Story