மனிதனுக்கும் ரோபோவுக்கும் ஏற்படும் பாசம்: ‘கூகுள் குட்டப்பா' சினிமா விமர்சனம்


மனிதனுக்கும் ரோபோவுக்கும் ஏற்படும் பாசம்: ‘கூகுள் குட்டப்பா சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 8 May 2022 10:37 AM GMT (Updated: 2022-05-08T16:07:15+05:30)

மலையாளத்தில் வெளியான 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த கூகுள் குட்டப்பா. எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வெறுக்கும் ஒரு மனிதனுக்கும் ரோபோவுக்கும் ஏற்படும் பாசம் தான் படத்தின் கதை.

‘எந்திரன்’ படத்துக்குப்பின், ‘ரோபோ’வை முக்கிய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் கதையின் நாயகனாக நடித்து இருக்கிறார். கொங்கு தமிழ் பேசும் ஒரு கிராமம்தான் கதைக்களம். மனைவியை இழந்த ரவிகுமாருக்கு ஒரே ஒரு மகன். அவர் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். அவருக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது.

மகனை ஜெர்மனிக்கு அனுப்ப ரவிகுமாருக்கு விருப்பம் இல்லை. அவரை சமாதானப்படுத்தி, மகன் ஜெர்மனிக்கு போய்விடுகிறார். வேலையில் சேர்ந்த அவருக்கு உடன் பணிபுரியும் இலங்கை தமிழ் பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது.

இந்த நிலையில், ரவிகுமாருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. ஊருக்கு வரும் அவருடைய மகன் அப்பாவின் துணைக்கு ஒரு ‘ரோபோ’வை கையோடு கொண்டு வருகிறார். அந்த ரோபோ, மனிதர்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்கிறது.

ஆரம்பத்தில், ரோபோவை விரும்பாத ரவிகுமார், போகப்போக அதனுடன் ஐக்கியமாகி விடுகிறார். ரோபோவுக்கு, ‘குட்டப்பா’ என்று பெயர் சூட்டுகிறார். குட்டப்பா சமையல் செய்கிறது. ரவிகுமாருடன், ‘வாக்கிங்’ போகிறது. அவருடைய மனைவி போட்டோவுக்கு ஊதுபத்தி கொளுத்தி வைக்கிறது.

ரோபோவை அனுப்பி வைத்த ‘சாப்ட்வேர்’ கம்பெனியின் உயர் அதிகாரி, அதை திரும்ப கேட்கிறார். அதை தனது இன்னொரு மகனாகவே கருதி பாசமழை பொழியும் ரவிகுமார், குட்டப்பாவை கொடுக்க மறுக்கிறார். முடிவு, எதிர்பாராதது.

அறுபதை கடந்த முதியவராக கே.எஸ்.ரவிகுமார் நடித்து இருக்கிறார். ஆசை, கோபம், சபலம் போன்ற சராசரி உணர்வுகளை கொண்ட ஒரு கிராமத்து பெரியவரை கண் முன் நிறுத்துகிறார். டைரக்டராக வெற்றி பெற்ற அவர், தேர்ந்த நடிகராகவும் மனதில் பதிந்து விடுகிறார். ‘குட்டப்பா’வின் பாகங்களை மருமகள் பிரித்து எடுத்ததை பார்த்து உணர்ச்சிவசப்படும் இடமும், அதன் தலையை வில்லன் வெட்டி வீசுவதை பார்த்து கதறும் இடமும் உதாரணமான காட்சிகள்.

யோகி பாபு வருகிற காட்சிகளில், தியேட்டரில் ஆரவாரம். ரவிகுமாரின் மகனாக புதுமுகம் தர்சன், அவருடைய காதலியாக லாஸ்லியா ஆகிய இருவரும் பொருத்தமான தேர்வு. சாப்ட்வேர் கம்பெனியின் உயர் அதிகாரியாக சுரேஷ் மேனன், டாக்டராக மனோபாலா, மாநகராட்சி அதிகாரியாக மாரிமுத்து, ஜோதிடராக சி.ரங்கநாதன் ஆகியோர் கதாபாத்திரங்களாக நினைவில் நிற்கிறார்கள்.

அர்வி ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும், கதையோட்டத்துக்கு பலம். படத்தின் ஆரம்ப காட்சிகள் பலவீனம். சபரி-சரவணன் இருவரும் டைரக்டு செய்து இருக்கிறார்கள். ஒரு மனிதருடன் ரோபோவை இணைத்து நேர்மையாகவும், விறுவிறுப்பாகவும் கதை சொல்லியிருக்கிறார்கள்.

‘கூகுள் குட்டப்பா', கோடைகால கொண்டாட்டம்.


Next Story