கணவனை உளவு பார்க்கும் மனைவி: விஷமக்காரன் - சினிமா விமர்சனம்


கணவனை உளவு பார்க்கும் மனைவி: விஷமக்காரன் - சினிமா விமர்சனம்
x
நடிகர்: வி (விஜய் குப்புசாமி). நடிகை: அனிக்கா விக்ரமன், சைத்ரா ரெட்டி  டைரக்ஷன்: வி (விஜய் குப்புசாமி) இசை: கவின்-ஆதித்யா ஒளிப்பதிவு : ஜெ. கல்யாண்

கணவனை உளவு பார்க்கும் மனைவியின் சந்தேகத்தால் ஏற்படும் விளைவு, எதிர்பாராத முடிவு.

அக்னி, பொறுப்புள்ள ஒரு வேலையில் இருப்பவர். இவருக்கும், தரங்கிணி என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாகிறது. இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக காதலித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அக்னியை விட்டு தரங்கிணி பிரிந்து ஆஸ்திரேலியா போய் விடுகிறார். அக்னிக்கு ஐகிரி என்ற பெண்ணுடன் காதல் மலர்கிறது. இருவரும் கணவன்-மனைவி ஆகிறார்கள். ஐகிரிக்கு அக்னி மீது வெறித்தனமான காதல். தன் காதல் கணவர் தன்னை மட்டுமே காதலிக்க வேண்டும். வேறு பெண்ணை திரும்பிக்கூட பார்க்க கூடாது என்கிற அளவுக்கு அபரிமிதமான காதலுடன் இருக்கிறார்.

இந்த நிலையில், அக்னியின் முன்னாள் காதலியான தரங்கிணி ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார். ஒரு ஓட்டலில் இருவரும் சந்தித்துக்கொள்ள விதி விளையாட ஆரம்பிக்கிறது. அக்னியையும், தரங்கிணியையும் இணைத்து ஐகிரி சந்தேகிக்கிறாள். கணவரை உளவு பார்க்கிறாள். அவளுடைய சந்தேகத்தின் விளைவு, எதிர்பாராத முடிவு.

கதாநாயகன் அக்னி, பொருத்தமான தேர்வு. கதாபாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கிறார். தரங்கிணியாக அனிக்கா விக்ரமன், ஐகிரியாக சைத்ரா ரெட்டி ஆகிய இருவரும் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். இந்த மூன்று கதாபாத்திரங்களையும் வைத்துக்கொண்டு சுவாரஸ்யமாக கதை சொல்லியிருக்கிறார் டைரக்டர் வி. உச்சக்கட்ட காட்சியில் வசனம் கைதட்டல் பெறுகிறது.

கதாநாயகன் அக்னி, படம் முழுக்க ஆங்கிலத்திலேயே பேசுவது, இது தமிழ் படம்தானா? என்று சந்தேகிக்க வைக்கிறது. இந்த குறையை தவிர்த்து பார்த்தால், கருத்துள்ள நகைச்சுவை படம் பார்த்த திருப்தி.


Next Story