வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து - புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி


வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து - புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 27 Feb 2020 10:00 PM GMT (Updated: 27 Feb 2020 5:15 PM GMT)

வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

போத்தனூர்,

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு ஏராளமான குடியிருப்புகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பள்ளி கள், நிறுவனங்கள் போன்றவை உள்ளன. மாநகர பகுதிகளில் குப்பை களை மாநகராட்சி ஊழியர்கள் சேகரிக்கின்றனர். பின்னர் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரிக்கின்றனர்.

கோவை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் 1000 டன் அளவுக்கு வெள்ளலூர் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தினமும் கொட்டப்படுகின்றன. இந்த குப்பை கிடங்கு 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு, மக்கும் குப்பைகள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரமும் இந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இது போல் நேற்று காலை இந்த குப்பை கிடங்கில் திடீரென்று தீப்பிடித்து பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதியே கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் கோவை மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்களால் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் தொடர்ந்து புகை வந்தபடியே இருந்தது. புகை மூட்டம் காரணமாக பெண்கள், முதியவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புக்களுக்கு ஆளானார்கள்.

தீவிபத்து நடைபெற்ற வெள்ளலூர் குப்பைக்கிடங்கை மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி, என்ஜினீயர் லட்சுமணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இது குறித்து வெள்ளலூர் பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் கூறும் போது, வெள்ளலூர் குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிகிறது. இது விபத்தா? அல்லது தீ வைக்கப்படுகிறதா? என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றனர். 

Next Story