கூடுதல் உற்பத்தி வரி ஒழிப்பு: பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி குறைப்பு


கூடுதல் உற்பத்தி வரி ஒழிப்பு: பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி குறைப்பு
x
தினத்தந்தி 1 Feb 2018 10:45 PM GMT (Updated: 1 Feb 2018 8:26 PM GMT)

மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் விலையில் மாற்றம் இருக்காது.

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது என்று கூறிக்கொண்டு நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

நாட்டின் நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்குரிய மும்பை மாநகரில் 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.10 மற்றும் டீசல் ரூ.67.10 என்ற அளவுக்கு உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி, நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்து பேசியபோது, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி குறைப்பை கீழ்க்கண்டவாறு அறிவித்தார்.

* வணிகச் சின்னம் இல்லாத ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு உற்பத்தி வரி ரூ.6.48-ல் இருந்து ரூ.4.48 ஆக குறைக்கப்படுகிறது.

* வணிகச் சின்னம் கொண்ட ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு உற்பத்தி வரி ரூ.7.66-ல் இருந்து ரூ.5.66 ஆக குறைக்கப்படுகிறது.

* வணிகச் சின்னம் இல்லாத ஒரு லிட்டர் டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.8.33-ல் இருந்து ரூ.6.33 ஆக குறைக்கப்படுகிறது.

* வணிகச் சின்னம் கொண்ட ஒரு லிட்டர் டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.10.69-ல் இருந்து ரூ.8.69 ஆக குறைக்கப்படுகிறது.

* இவ்விரு எரிபொருட்கள் மீது லிட்டருக்கு ரூ.6 விதிக்கப்பட்டு வந்த கூடுதல் உற்பத்தி வரி ஒழிக்கப்படுகிறது.

இதை பார்க்கிறபோது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ.8 குறையும் என்பதுபோல தோன்றும். ஆனால் அப்படி விலை குறையாது.

இதற்கு காரணம், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு ரூ.8 புதிய சாலை வரியாக விதிக்கப்படுகிறது.

எனவே பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைந்தாலும், அதைப் பயனாளிகள் அனுபவிக்க முடியாதபடிக்கு அதே அளவுக்கு புதிதாக சாலை வரி விதிக்கப்பட்டு விட்டது.

பிட் காயின் போன்ற ‘மெய்நிகர் நாணயம் ஒழிப்போம்’
அருண் ஜெட்லி அறிவிப்பு. நமது நாட்டில் கிரிப்டோ கரன்சி (மெய் நிகர் நாணயம்) என்று அழைக்கப்படுகிற பிட் காயின், ரிப்பிள், எத்திரியம் போன்றவை புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவற்றுக்கு சட்டபூர்வ அனுமதி கிடையாது.

இந்த நிலையில் இத்தகைய மெய் நிகர் நாணயம் தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் நேற்று குறிப்பிட்டார்.

அப்போது அவர், “மெய்நிகர் நாணயத்தை அரசு சட்டப்படியான கரன்சியாக கருதவில்லை. எனவே அதை உபயோகத்தில் இருந்து ஒழித்துக்கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்” என்று கூறினார்.

இந்த அறிவிப்பால் மெய்நிகர் நாணயப் பயன்பாடும், அவற்றின் மதிப்பும் குறையக்கூடும் என பணச்சந்தை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

நிறுவனங்களுக்கு அடையாள அட்டை பட்ஜெட்டில் புதிய திட்டம்,
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்னும் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இது அரசின் சலுகைகளை பெறவும், திட்டங்களின் பலனை அடையவும் உதவியாக அமைந்து உள்ளது.

இந்த நிலையில் நமது நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தப்போகிறது.

இது குறித்து மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி குறிப்பிட்டு உள்ளார். அதில் அவர், “ஒவ்வொரு நிறுவனத்துக்கும், அது பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி, ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. எனவே நாட்டில் உள்ள நிறுவனங்கள் அனைத்துக்கும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வரும்” என்று கூறினார்.

மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துறையை ஊக்குவிக்க அதிக கவனம்
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இயற்கை விவசாயத்தின் மூலம் நிலையான விவசாயத்தை ஊக்குவிக்க பல வழிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக பயன்படுத்தும் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற காய்கறிகளுக்கு தனிக்கவனம் செலுத்தி, ‘ஆபரேஷன் க்ரீன்’ எனக் கூறி ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து கூட்டுறவு மற்றும் சிறிய அளவிலான தயாரிப்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை ஆதரிப்பது வரவேற்கத்தக்கது.

வேளாண் வளர்ச்சி வேலைவாய்ப்பை பெருக்கி அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைய விவசாயம் மற்றும் விவசாயம் சாராத துறையை ஊக்குவிப்பதற்காக அதிகபட்சமாக இதில் கவனம் செலுத்தி உள்ளது. ஊட்டச்சத்து குறைப்பாட்டைப் போக்க விவசாயம், ஊட்டச்சத்து, ஆரோக்கியம் இம்மூன்றும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஆக மொத்தம் இந்த நிதிநிலை அறிக்கை விவசாயத்தில் ஒரு சில பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பரிந்துரைகளை கொண்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
* தனி நபர்களுக்கான வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

* சம்பளதாரர்கள் இதுவரை பெற்று வந்த மருத்துவம் மற்றும் போக்குவரத்து அலவன்சுக்கு பதிலாக ரூ.40 ஆயிரம் வரை நிரந்தர கழிவு வழங்கப்பட உள்ளது.

* ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருவாய் உள்ளவர்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி 10 சதவீதமும், ரூ.1 கோடிக்கு அதிகமான வருவாய் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி 15 சதவீதமும் அடுத்த ஆண்டுக்கும் தொடரும்.

* வருமான வரி மீதான கல்வி வரி 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.

* வரும் 3 ஆண்டுகளுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் புதிதாக சேரும் ஊழியர்களுக்கான பங்களிப்பு 12 சதவீதம் அரசு சார்பில் அளிக்கப்படும்.

* ரூ.2½ லட்சம் அல்லது அதற்கு அதிகமான பணபரிமாற்றத்துக்கு பான் கார்டு கட்டாயமாகிறது.

* ஜனாதிபதிக்கு சம்பளம் ரூ.5 லட்சமாகவும், துணை ஜனாதிபதிக்கு ரூ.4 லட்சமாகவும், மாநில கவர்னர்களுக்கு ரூ.3.50 லட்சமாகவும் மாத சம்பளம் உயர்த்தப்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப எம்.பி.க்களின் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளமும் உயரும்.

* மத்திய பா.ஜனதா அரசு முதல் 3 ஆண்டுகளில் 7.5 சதவீதம் வளர்ச்சி விகிதத்தை எட்டி உள்ளது.

* உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவாகும்.

* 5-ஜி பயன்பாடு தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி.யில் ஆய்வு மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்.

* உற்பத்திக்கான விலையை விட விளைபொருட்களின் விலை 1½ மடங்கு அதிகமாக விவசாயிகள் ஈட்டும் வகையில் செயல் திட்டங்களை வகுக்க மத்திய அரசு முனைப்பு காட்டும்.

* விவசாய விளைபொருட்களை மேம்படுத்தும் வகையில் ரூ.2 ஆயிரம் கோடியில் 22 ஆயிரம் விளைபொருள் சந்தை உருவாக்கப்படும்.

* கிசான் கிரெடிட் அட்டை மீன் வளம், கால்நடை வளர்ப்புக்கும் நீட்டிக்கப்படும். இந்த இரு துறைகளிலும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* விவசாய கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடியில் இருந்து ரூ.11 லட்சம் கோடியாக கடந்த நிதி ஆண்டில் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

* தூய்மை இந்தியா திட்டத்தில் வரும் நிதியாண்டில் நாடு முழுவதும் 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்.

* தேசிய கிராமப்புற வாழ்முறை திட்டத்துக்கு ரூ.5 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கப்படுகிறது.

* தேசிய அளவில் புதிய உடல்நல பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ உதவி பெற முடியும்.

* டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ரூ.3 ஆயிரத்து 73 கோடி ஒதுக்கப்படுகிறது.

* அரசு நிறுவனங்களின் பங்குகளை விலக்கிகொள்வதன் மூலம் ரூ.80 ஆயிரம் கோடி நிதி திரட்டப்படும்.

* பிரதமரின் சவுபாக்யா திட்டத்தில் 4 கோடி ஏழை மக்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படும்.

* 2022-ல் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அரசு திட்டமிட்டு இருக்கிறது.

* நாட்டில் உள்ள விமான நிலையங்கள் 5 மடங்காக அதிகரிக்கப்படும்.

* மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அரசு ரூ.150 கோடி ஒதுக்குகிறது.

* இந்த ஆண்டு ஜனவரி 15-ந்தேதி வரை நேரடி வரிகள் மூலம் அரசுக்கு வருவாய் 18.7 சதவீதம் அதிகரித்து உள்ளது.

* ரூ.250 கோடி வரை விற்றுமுதல் செய்யும் கம்பெனிகளுக்கு 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக வரி குறைக்கப்பட்டு உள்ளது.

* உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கு 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும், டி.வி.களுக்கு 15 சதவீதமாகவும் சுங்க வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

* இறக்குமதி செய்யப்படும் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் வகைகளுக்கு சுங்க வரி 12.5 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகவும், ரீபைண்டு சமையல் எண்ணெய் வகைகளுக்கு 20 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாகவும், வாசனை திரவியங்களுக்கு 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் அதிகரிக்கப்படுகிறது.

* சோலார் கண்ணாடிகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

* மூத்த குடிமக்களின் தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் சேமிப்புக்கு ரூ.50 ஆயிரம் வரை வட்டிக்கு வரி இல்லை. இது முன்பு ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.

* மூத்த குடிமக்கள் சுகாதார காப்பீட்டுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது.

Next Story