ரஜினிகாந்தின் பெரியார் குறித்த பேச்சு: ஆதரவும் எதிர்ப்பும் ; வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு


ரஜினிகாந்தின் பெரியார் குறித்த பேச்சு: ஆதரவும் எதிர்ப்பும் ; வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Jan 2020 5:37 AM GMT (Updated: 22 Jan 2020 5:37 AM GMT)

ரஜினிகாந்தின் பெரியார் குறித்த பேச்சிற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இந்த நிலையில் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

துக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பேரணியின் போது ராமர், சீதையின் உருவங்கள் ஆடையில்லாமல் கொண்டு வரப்பட்டதாகவும், சோ வின் துக்ளக் பத்திரிகையைத் தவிர வேறு எந்த பத்திரிகையும் இதை வெளியிடவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ரஜினி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது  கேள்விபட்டதையும் அவுட்லுக் பத்திரிகையில் வந்ததையே  தான்  பேசியதாகவும் அதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் ஒரு நடிகர் என்றும் அவர் அரசியல்வாதி இல்லை என்று கூறிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பெரியார் குறித்து பேசும் போது ரஜினிகாந்த் யோசித்து கருத்து கூற வேண்டும் என்று கூறினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பெரியார் குறித்து பேசுபவர்கள், அவரது கருத்துக்களை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டுமென கூறி உள்ளார்.

பழ.கருப்பையா கூறும் போது,  சமூக விழிப்புணர்வுக்காக பெரியார் செய்த காரியங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது தான். தவறான கருத்தை சொன்னால் ரஜினிகாந்தை மக்கள் ஓரம்கட்டி விடுவார்கள். கடவுள் ஏற்பு, மறுப்பு என்பது அரசியல் மையமாக இருக்க முடியாது என கூறினார். 

நாகரீக அரசியல் செய்ய விரும்பினால் நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பெரியார் நடத்திய ஊர்வலம் தொடர்பாக, உண்மை தெரிந்த பிறகு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்பார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, பாஜக எம்.பி., சுப்பிரமணியன்சுவாமி ஆகியோர் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ராம்லீலா என்ற பெயரில் வடமாநிலங்களில் ராவணன் உருவ பொம்மை எரிப்பதை கைவிட வலியுறுத்தும் வகையில், 1971-ம் ஆண்டு சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக பெரியார் தலைமையில் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. அதில், பெரியாரை நோக்கி இந்து மகா சபையினர் எறிந்த காலணி, ராமர் உருவப்படம் கொண்டு சென்ற வண்டி மீது விழுந்ததாகவும், அதனையே தற்போது திரித்து கூறுவதாகவும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்த ஊர்வலம் பற்றி தம்மிடம் கூறியதாக ரஜினி தெரிவித்த பா.ஜ.க மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் அதனை மறுத்துள்ளார். அதாவது, ராமர், சீதை படங்கள் நிர்வாணமாக கொண்டு செல்லப்படவில்லை என்றும் அதேநேரம், செருப்பு மாலை போட்டது உண்மைதான் என்றும் அவர் கூறியுள்ளார். ரஜினி கூறுவது தவறான தகவல் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயார் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்திற்கு  சென்றிருக்கிறது. இருதரப்பினரும் ஆதாரங்களைத் தாக்கல் செய்யும் போது உண்மையில் நடந்தது என்ன என்பது வெளிச்சத்துக்கு வரும்.

இந்த நிலையில் போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு பாதுகாப்பு  அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Next Story