நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சர்ச்சையான தீர்ப்பால் அவுட்டாகிய கோலி


நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சர்ச்சையான தீர்ப்பால் அவுட்டாகிய கோலி
x
தினத்தந்தி 3 Dec 2021 12:17 PM GMT (Updated: 3 Dec 2021 12:17 PM GMT)

பந்து முதலில் மட்டையில் பட்டதற்கான தகுந்த ஆதாரம் இல்லை என கள நடுவரின் முடிவை தொடர மூன்றாவது நடுவர் வீரேந்தர் ஷர்மா முடிவு செய்தார்.

மும்பை ,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் போட்டி ‘டிரா’வில் முடிந்தது.

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கும்  என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்த காரணத்தால் போட்டி தாமதகமாக தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். 44 ரன்கள் எடுத்திருந்த போது சுப்மன் கில் ,அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் குடுத்து ஆட்டமிழந்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா , அஜாஸ் பட்டேல் வீசிய 29.2 ஓவரில் ரன் எடுக்காமல் வெளியேறினார்.அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி அதே ஓவரில் கடைசி பந்தில் ரன் எடுக்காமல் வெளியேறினார்.இந்த போட்டியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால்  196 பந்தில் தனது 4 வது டெஸ்ட் சதத்தை அடித்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மூன்றாவது நடுவர்  வழங்கிய தீர்ப்பு தற்போது சர்ச்சையாகியுள்ளது. 30வது ஓவரில் அஜாஸ் பட்டேலின் பந்து வீச்சில் கோலிக்கு எல்.பி.டபிள்யு  முறையில் கள நடுவர் அவுட் வழங்கினார்.

இதை எதிர்த்து கோலி மூன்றாவது நடுவரிடம் மேல்முறையீடு செய்தார். ரீப்ளேவில் பந்து முதலில் மட்டையில் பட்டது போல தெரிந்தது. ஆனால் பந்து லெக் பேடைத் தாக்கும் முன் மட்டையைத் தாக்கியதா ? அல்லது ஒரே நேரத்தில் இரண்டிலும் பட்டதா என்பதைக் கண்டறிவது கடினமாக இருந்தது.

 மூன்றாவது நடுவர் வீரேந்தர் ஷர்மா பலமுறை  பல்வேறு கோணங்களில் இருந்தும் பார்த்தார். இருப்பினும் பந்து முதலில் மட்டையில் பட்டதற்கான தகுந்த ஆதாரம் இல்லை என கள நடுவரின் முடிவை தொடர முடிவு செய்தார். 

மைதானத்தில் இருந்த பெரிய திரையில் அவுட் என முடிவு தெரிந்த போது கோலி மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.கோலி விரக்தியுடன் வெளியேறும் முன் கள நடுவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார். பயிற்சியாளர் டிராவிட் கூட ஓய்வு அறையில்  தனக்குப் பக்கத்தில் இருந்த டிவி திரையில் ரீப்ளேக்களைப் பார்த்தபோது அவரது முகத்தில் குழப்பமான தோற்றம் நிலவியது.டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக கோலியின் 10வது டக் இதுவாகும். 

Next Story