ஏ.டி.எம்.களில் அலைமோதிய மக்கள் கூட்டம்


ஏ.டி.எம்.களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2016 9:45 PM GMT (Updated: 13 Dec 2016 8:55 PM GMT)

புதுவையில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தட்டுப்பாடு இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளிலும் போ

புதுச்சேரி,

புதுவையில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

தட்டுப்பாடு

இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளிலும் போதிய அளவு ரூபாய் நோட்டுகள் கையிருப்பில் இல்லை. வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

அதையும் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்துதான் பெறமுடிகிறது. பெரும்பாலான நேரங்களில் அந்த பணமும் வங்கிகளில் கிடைப்பதில்லை. கிடைக்கும் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கும் சில்லறை கிடைக்காமல் பொதுமக்கள் நாள்தோறும் அவதியடைந்து வருகின்றனர்.

மக்கள் கூட்டம்

மேலும் ஏ.டி.எம்.களிலும் நாளொன்றுக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. மிலாது நபி விடுமுறை தினமான நேற்று புதுவையில் ஒரு சில ஏ.டி.எம்.களை தவிர பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடியே கிடந்தன. ஒருசில தனியார் வங்கி ஏ.டி.எம்.களில் மட்டும் பணம் கிடைத்தது.

இந்த ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். அதிலும் புதுவைக்கு சுற்றுலா வந்தவர்களே அதிக அளவில் காத்திருந்தனர். சுற்றுலா வந்த இடத்தில் பணத்துக்காக அவர்கள் மணிக்கணக்கில் காத்திருந்ததால் வேதனையடைந்தனர்.


Next Story