ஏ.டி.எம். மையங்கள் முடங்கின பண பரிவர்த்தனைக்கு வங்கிகளில் குவிந்த பொதுமக்கள்


ஏ.டி.எம். மையங்கள் முடங்கின பண பரிவர்த்தனைக்கு வங்கிகளில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-15T01:52:22+05:30)

சிவகங்கை மாவட்டம் முழுவதும் வங்கிகளில் பொதுமக்கள் குவிந்ததால் பண பரிவர்த்தனைகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. ஏ.டி.எம். மையங்களும் முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வங்கிகளுக்கு விடுமுறை உயர் மதிப்புமிக்க ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழை

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் முழுவதும் வங்கிகளில் பொதுமக்கள் குவிந்ததால் பண பரிவர்த்தனைகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. ஏ.டி.எம். மையங்களும் முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

வங்கிகளுக்கு விடுமுறை

உயர் மதிப்புமிக்க ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியும், டெபாசிட் செய்தும் வருகின்றனர். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் போதிய பணமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 10, 11-ந்தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 12-ந்தேதி(திங்கட்கிழமை) வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. இருப்பினும் சிலருக்கு வங்கி பரிவர்த்தனை செய்ய முடிந்தது. இதனையடுத்து மறுநாள்(13-ந்தேதி) அரசு விடுமுறை காரணமாக வங்கிகள் அடைக்கப்பட்டன. இந்தநிலையில் தொடர் விடு முறைக்கு பிறகு நேற்று வங்கிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டன. ஆனால் மக்களிடையே பண தட்டுப்பாடு காரணமாக அதிகாலையில் வங்கி திறப்பதற்கு முன்பே வாசலில் காத்து கிடந்தனர். மாவட்டம் முழுவதும் இதே நிலையே நீடித்தது. இந்த பணப்பிரச்சினையில் பெரும்பாலும் நடுத்தர, ஏழை மக்கள், ஓய்வூதியதாரர்கள், முதியவர்கள் தான் பெரிதும் அவதியடைகின்றனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் பணப்பிரச்சினை சரியாகவில்லை. வங்கிகளில் தான் இந்த நிலைமை என்றால் ஏ.டி.எம். எந்திரங்கள் பணமில்லாத ஏ.டி.எம். மையங்களாக உள்ளன. கடந்த சில தினங்களாக இயங்கி வந்த ஒருசில ஏ.டி.எம். மையங்களும் நேற்று முடங்கி போயின. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் மேலும் தவிப்பிற்கு உள்ளானார்கள்.

காத்திருப்பு

சிங்கம்புணரியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுக்க பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த வங்கியில் பணம் எடுக்கவும், போடவும் பொதுமக்கள் வங்கியின் உள்ளே குறைந்த அளவே அனுப்பப்பட்டனர். பிறகு வங்கியின் கேட் அதிகாரிகளால் பூட்டபட்டதால், மீதம் உள்ள பொதுமக்கள் வங்கி வாசலில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திறந்த வெளியில் காத்து நின்றதால் பொதுமக்களுக்கு சோர்வும், மயக்கமும் ஏற்பட்டது.

இதுகுறித்து முருகன் என்பவர் கூறியதாவது:- சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக திறந்த வெளியில் வெயிலில் நின்று கொண்டிருக்கிறோம். நேரம் செல்ல செல்ல வங்கியில் பணம் இல்லை என்று சொல்வார்களோ என்ற அச்சத்துடன் நிற்க வேண்டி உள்ளது.

வெயிலின் தாக்கமும் அதிகரிக்க மிகவும் சோர்வு ஏற்பட்டது. ஏ.டி.எம். மையங்களில் எடுக்கலாம் என்று பார்த்தால், அனைத்து ஏ.டி.எம். மையங்களும் பூட்டி கிடக்கின்றன. என்றைக்கு தான் தீருமோ இந்த பணப்பிரச்சினை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த வங்கியின் வெளியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. 

Next Story