கட்சிக்காரருக்கு சேர வேண்டிய ரூ.1¼ லட்சத்தை மோசடி செய்ததாக வழக்கு: வக்கீலின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கட்சிக்காரருக்கு சேர வேண்டிய ரூ.1¼ லட்சத்தை மோசடி செய்ததாக வழக்கு: வக்கீலின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-16T23:46:45+05:30)

கட்சிக்காரருக்கு சேர வேண்டிய ரூ.1¼ லட்சத்தை மோசடி செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரிய வக்கீலின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மோசடி வழக்கு தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 2014–ம் ஆண்டு மோட்டார் சைக

மதுரை,

கட்சிக்காரருக்கு சேர வேண்டிய ரூ.1¼ லட்சத்தை மோசடி செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரிய வக்கீலின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மோசடி வழக்கு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 2014–ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதற்காக ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு கோபிச்செட்டிபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் எதிர்தரப்பாக தனியார் இன்சூரன்சு நிறுவனம் சேர்க்கப்பட்டிருந்தது. அவருக்காக அதே பகுதியை சேர்ந்த வக்கீல் எஸ்.நடராஜன் ஆஜரானார்.

பின்னர் அந்த வழக்கு பெரியகுளம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில் தங்களுக்கு சேர வேண்டிய இழப்பீட்டு தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை வக்கீல் நடராஜன் மோசடி செய்துவிட்டதாக, பழனிச்சாமி குடும்பத்தினர் ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு

இதற்கிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நடராஜன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு தரப்பு வக்கீல், “பழனிச்சாமி இழப்பீடு கேட்ட வழக்கு லோக் அதாலத் மூலம் சமரச தீர்வு காணப்பட்டு, அவருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீட்டு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுவிட்டது என்று இன்சூரன்சு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் பழனிச்சாமி 3.3.2015 அன்று இறந்துவிட்டார். அதற்கு பின் சில நாட்கள் கழித்து 15.3.2015 அன்று தான் அவரது இழப்பீடு வழக்கு லே£க்அதாலத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே இந்த மோசடி தொடர்பாக நடராஜனிடம் விசாரிக்க வேண்டி இருப்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது“ என்று வாதாடினார்

. மனு தள்ளுபடி

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

இந்த மோசடி குறித்து மனுதாரர் நடராஜனிடம் விசாரிக்க வேண்டும் என்பதால் அவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பழனிச்சாமி இறந்ததால் அவரது குடும்பம் கஷ்டத்தில் இருந்திருக்கும். அதுபோன்ற நேரத்தில் மனுதாரர் மோசடியில் ஈடுபடலாமா.

வக்கீல்கள் நீதித்துறையின் அங்கத்தினர். இவர் மீதான குற்றச்சாட்டு நீதித்துறையை களங்கப்படுத்துவதாக உள்ளது. எனவே அவராகவே வக்கீல் தொழிலில் இருந்து விலக வேண்டும். இந்த உத்தரவை தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு பதிவுத்துறை அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story