திருச்சி உறையூர் பகுதியில் குப்பை தொட்டியில் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் போலீசார் கைப்பற்றி விசாரணை


திருச்சி உறையூர் பகுதியில் குப்பை தொட்டியில் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் போலீசார் கைப்பற்றி விசாரணை
x
தினத்தந்தி 18 Dec 2016 11:30 PM GMT (Updated: 2016-12-19T02:19:31+05:30)

திருச்சி உறையூர் பகுதியில் குப்பை தொட்டியில் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் போலீசார் கைப்பற்றி விசாரணை

திருச்சி,

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் 1000 ரூபாய் நோட்டுகள் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்டிருந்தன. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக உயர்மதிப்பு கொண்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவிக்கப்பட்டது. செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு ஏற்கனவே முடிந்து விட்டது. வங்கி கணக்குகளில் இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான கால அவகாசம் மட்டும் வருகிற 30-ந்தேதி வரை உள்ளது.

கருப்பு பணம் பறிமுதல்

பிரதமர் நரேந்திரமோடியின் இந்த அதிரடி அறிவிப்பு ஏழை, எளிய மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் நீண்ட நேரம் காத்து நின்று குறிப்பிட்ட அளவிலான பணத்தை மட்டும் எடுத்து வருகிறார்கள். இவை ஒரு புறம் இருக்க வங்கி அதிகாரிகள் மூலம் குறுக்கு வழியில் கருப்பு பணத்தை மாற்றியவர்களை கண்டுபிடிக்கும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் கருப்பு பண வேட்டையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடத்திய அதிரடி சோதனைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பதுக்கியவர்கள் தவிப்பு

செல்லாது என அறிவிக்கப்பட்ட உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வங்கியில் ரூ.2½ லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அதற்கு உரிய கணக்கு காட்ட வேண்டும், மேலும் அந்த தொகைக்கு 50 சதவீதம் அபராத வரி செலுத்த வேண்டும் என்பன உள்பட பல கடுமையான விதிமுறைகளும் அமலில் உள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் நாளுக்கு நாள் இறுகி வருவதால் கருப்பு பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்கள், பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

வெட்டி வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்

இந்தநிலையில் திருச்சி உறையூர், சாலைரோட்டில் இருந்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வழியாக தனியார் கல்லூரிக்கு செல்லும் பாதையில் உள்ள ஒரு குப்பை தொட்டியில், 1,000 ரூபாய் நோட்டுகள் துண்டு, துண்டாக வெட்டி கிழித்து வீசப்பட்டு கிடந்தன. நேற்று காலை குப்பைகளை அள்ளுவதற்காக வந்த மாநகராட்சி பெண் ஊழியர் ஒருவர் 1000 ரூபாய் நோட்டுகள் துண்டு, துண்டாக வெட்டி கிழித்து போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி மக்களும் அங்கு ஓடி வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கத்தரிக்கோலால் வெட்டப்பட்டது போன்று துண்டு, துண்டாக இருந்த ரூபாய் நோட்டுகளின் பாகங்களை சிலர் சேகரித்து ஒன்று சேர்க்க முயற்சித்தனர்.

போலீசார் கைப்பற்றினர்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் உறையூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். துண்டு, துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசப்பட்டு குப்பையோடு குப்பையாக கிடந்த 1000 ரூபாய் நோட்டுகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் சேகரித்து சென்றுள்ளனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சுமார் 20 எண்ணிக்கையில் கிழித்து எறியப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர். ஆனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களோ கத்தை, கத்தையாக 1000 ரூபாய் நோட்டுகள் வெட்டி வீசப்பட்டு இருக்கலாம். அதிகாலையில் இருந்தே இந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது என்றனர். கருப்பு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் வருமான வரித்துறை அதிகாரிகளின் பிடியில் சிக்கி கொள்ளும் நிலை ஏற்படும் என்ற பயத்தின் காரணமாக, யாரோ இப்படி குப்பை தொட்டியில் வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. வீசிய நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு முன்...

இதே பகுதியில் உள்ள இன்னொரு குப்பை தொட்டியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் ரூபாய் நோட்டுகள் லட்சக்கணக்கில் வெட்டி வீசப்பட்டு கிடந்தது குறிப்பிடத்தக்கது. அதை யார் வீசி சென்றனர்? என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் 2-வது முறையாக அந்தப்பகுதியில் ரூபாய் நோட்டுகள் துண்டு, துண்டாக வெட்டி கிழித்து வீசப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story