சேலத்தில் துணிகரம்: தனியார் ஆஸ்பத்திரி அதிகாரி வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


சேலத்தில் துணிகரம்: தனியார் ஆஸ்பத்திரி அதிகாரி வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Dec 2016 11:00 PM GMT (Updated: 19 Dec 2016 1:43 PM GMT)

சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரி அதிகாரி வீட்டில் 24 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தனியார் ஆஸ்பத்திரி அதிகாரி சேலம் இரும்பாலையை அடுத்துள்ள மாரமங்கலத்துப்பட்டி அருகே உள்ள கீதாநகர் அனெக்ஸ் பகுதியில் வசித்து வருபவர

சூரமங்கலம்,

சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரி அதிகாரி வீட்டில் 24 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தனியார் ஆஸ்பத்திரி அதிகாரி

சேலம் இரும்பாலையை அடுத்துள்ள மாரமங்கலத்துப்பட்டி அருகே உள்ள கீதாநகர் அனெக்ஸ் பகுதியில் வசித்து வருபவர் தோப்பு காளை(வயது 63). இவர் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரத்தினம். இவர் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

தோப்புகாளை தனது மூத்த மகளை திருமணம் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்தநிலையில் மாப்பிள்ளை பார்ப்பது விஷயமாக தோப்புகாளை கடந்த 17–ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்றார். பின்னர் அவர்கள் நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

24 பவுன் நகை கொள்ளை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே வீட்டுக்குள் சென்றனர். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 24 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுபற்றி தோப்பு காளை இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் சுவரின் வழியாக ஏறி குதித்து பின்னர் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

மேலும் தோப்புகாளை குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் லோகநாதன், முருகன் ஆகியோர் வந்து அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுதவிர அங்கு மோப்பநாய் மேகா வரவழைக்கப்பட்டது.

இதையடுத்து இந்த நாய் அங்கிருந்து சிறிது தூரமே ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தனியார் ஆஸ்பத்திரி அதிகாரி வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story