வேலஞ்செட்டியூர் சுங்கச்சாவடியில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


வேலஞ்செட்டியூர் சுங்கச்சாவடியில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Dec 2016 9:11 PM GMT (Updated: 19 Dec 2016 9:11 PM GMT)

வேலஞ்செட்டியூர் சுங்கச்சாவடியில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

அரவக்குறிச்சி,

வேலஞ்செட்டியூர் சுங்கச்சாவடியில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளிருப்பு போராட்டம்

அரவக்குறிச்சி வேலஞ்செட்டியூரில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இந்த சுங்கச்சாவடியில் பணியாற்றிய பாலகிருஷ்ணன், பெரியசாமி, பாலு, வேல்முருகன், கருப்பையா ஆகியோரை ஜார்கண்டிற்கு நிர்வாகம் பணி மாற்றியுள்ளது. ஆனால் அவர்கள் அங்கு சென்று பணியாற்றாமல்,அதற்கான ஆணையையும் வாங்காமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்நிலையில் மற்ற பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வேலைபார்க்கும் பணியாளர்கள் நேற்று திடீரென அரவக்குறிச்சி வேலஞ்செட்டியூர் சுங்கச்சாவடிக்கு வந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

விக்கிரவாண்டி ஏ.ஐ.டி.யு.சி. மதுக்கான் மாவட்ட தலைவர் சுந்தர், துணைத்தலைவர் பெருமாள், கிளைத்தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 28 பேர் கொடியுடன் நிறுவனத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சுங்கச்சாவடி மேலாளர் தாகூர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பணிமாறுதல் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணி அமர்த்திக்கொள்வதெனவும், 15 நாட்களுக்குள் மதுக்கான் உரிமையாளர் முன்னிலையில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story