மகரவிளக்கை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு மகர சங்ரம பூஜை 14-ந் தேதி நடக்கிறது


மகரவிளக்கை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு மகர சங்ரம பூஜை 14-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 9 Jan 2017 10:30 PM GMT (Updated: 9 Jan 2017 8:38 PM GMT)

மகரவிளக்கை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு மகர சங்ரம பூஜை 14-ந் தேதி நடக்கிறது

சபரிமலை,

மகர விளக்கையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு நெய் அபிஷேகத்துடன் மகர சங்ரம பூஜை 14-ந் தேதி காலை 7.40 மணிக்கு நடைபெறுகிறது.

மகர ஜோதி தரிசனம்

2016-17-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 15-ந் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பின்னர் டிசம்பர் 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது.

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு டிசம்பர் 30-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டும், தரிசனத்திற்கான காலதாமதத்தை குறைக்கும் வகையிலும் இந்த சீசனில் நடை திறக்கப்பட்ட நாள் முதல் பக்தர்களின் தரிசனத்திற்கு வழக்கத்தை விட 5 மணி நேரம் கூடுதலாக பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பிரசித்திப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறும். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன் ஏற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திருவாபரண ஊர்வலம்

மகர விளக்கு தினத்தில் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பத்தனம்திட்டை மாவட்டம் பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த திருவாபரணங்கள் நாளை மறுநாள் (12-ந் தேதி) பந்தளம் ராஜ பிரதிநிதியின் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் சிறப்பு மகர சங்ரம பூஜை குறித்து சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு கூறியதாவது:-

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு 14-ந் தேதி திருவிதாங்கூர் ராஜவம்சத்தின் தலைநகரான திருவனந்தபுரம் கொட்டாரத்தில் இருந்து கொண்டு வரப்படும் சிறப்பு நெய் மூலம் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து காலை 7.40 மணிக்கு சிறப்பு மகர சங்ரம பூஜை நடைபெறும். முன்னதாக 13-ந் தேதி இரவு பிரசாத சுத்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து கலசம், அஸ்திர கலசம் ஆகியவை நடைபெறுகிறது.

சிறப்பு படி பூஜை

14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும் திருவாபரண ஊர்வலத்திற்கு சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை 6 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும் திருவாபரணங்கள், அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து 6.30 மணியளவில் பொன்னம்பல மேட்டில் ஜோதிவடிவில் அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சியுடன் அருள் தருவார்.

16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சபரிமலையில் சிறப்பு படிபூஜை நடை பெறும். பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, உதாஸ்தமன பூஜை 16, 17 ஆகிய 2 தேதிகளில் நடைபெறும்.

நடையடைப்பு

20-ந் தேதி காலை 7 மணிக்கு மன்னர் பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் நடை அடைக்கப்பட்டு நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவு பெறும். மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 12- ந் தேதி மாலை திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னர் தரிசனம்

சபரிமலையில் நேற்று, காலை கேரள கவர்னர் பி.சதாசிவம் சாமி தரிசனம் செய்தார்.

கவர்னரின் வருகையையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story