காணும் பொங்கல் இன்று கொண்டாட்டம்: சென்னையில் பாதுகாப்பு பணிக்கு 15 ஆயிரம் போலீசார் குவிப்பு மெரினா கடலில் இறங்கி குளிக்க தடை


காணும் பொங்கல் இன்று கொண்டாட்டம்: சென்னையில் பாதுகாப்பு பணிக்கு 15 ஆயிரம் போலீசார் குவிப்பு மெரினா கடலில் இறங்கி குளிக்க தடை
x
தினத்தந்தி 16 Jan 2017 5:37 AM IST (Updated: 16 Jan 2017 5:37 AM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கல் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் பாதுகாப்பு பணிக்கு 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

காணும் பொங்கல் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் பாதுகாப்பு பணிக்கு 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினா கடலில் இறங்கி குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காணும் பொங்கல்


பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் நிறைவாக காணும் பொங்கல் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் நீர்நிலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உறவினர்கள், நண்பர்கள் சந்தித்து கொள்வார்கள். அதன்படி, சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, பூங்காக்கள், தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் ஆகிய இடங்களில் இன்று பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள்.

இதையொட்டி, பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக, சென்னை பெருநகர காவல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

15 ஆயிரம் போலீசார் குவிப்பு

காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு இன்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், சென்னை மாநகரில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜின் உத்தரவின்பேரில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம் ஆகிய இடங்கள், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் பல இடங்களில் சென்னை பெருநகர போலீஸ் கூடுதல் கமிஷனர்கள் அறிவுரையின்பேரில், போலீஸ் இணை கமிஷனர்கள் நேரடி மேற்பார்வையில், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என மொத்தம் 15 ஆயிரம் பேர் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்காலிக காவல் உதவி மையம்

மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் காவல் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட காவல் குழுவினர் மூலம் தலா ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை மற்றும் ஒரு தற்காலிக காவல் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் அவசர மருத்துவ உதவிக்காக 2 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

மேலும், உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரைவிளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 6 தற்காலிக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு, வான் தந்தி கருவி (வாக்கி டாக்கி), பைனாகுலர், ஆகியவை வழங்கப்பட்டு, பைனாகுலர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். அன்றைய தினம் கடலில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் மூலம் பொதுமக்கள் கடலில் குளிக்காமல் கண்காணிக்கப்படுவர்.

கண்காணிப்பு

மேலும், குதிரைப் படை மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய வாகனம் மூலம் போலீசாரால் ரோந்து வரப்பட்டு, திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்படும். மேலும், சிறிய அளவிலான 10 நான்கு சக்கரவாகனங்களில் ஒலி பெருக்கிகள் மூலம் பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டும் கண்காணிக்கப்படும். இது மட்டுமின்றி சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மற்றும் போலீசாரால் ரோந்து சுற்றிக்கொண்டு கண்காணிக்கப்படும். மோட்டார் படகுகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த நபர்கள் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், ஒரு தற்காலிக காவல் உதவி மையம், அமைக்கப்பட்டு காவல் குழுவினர்களால் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும், மீட்புப் பணி மற்றும் மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினர் அடங்கிய ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வீரர்கள் கொண்ட தீயணைப்பு வாகனம் மற்றும் அப்பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த 25 பேர் மற்றும் படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

அடையாள அட்டைகள்


4 தற்காலிக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசாரால் பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், குதிரைப்படை மற்றும் 2 மணற்பரப்பில் செல்லக்கூடிய வாகனம், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து வரப்பட்டு, கண்காணிக்கப்படுவதுடன் ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளும் வழங்கப்படும்.

மேலும், கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக, உழைப்பாளர் சிலை அருகில், காந்தி சிலை அருகில் மற்றும் எலியட்ஸ் கடற்கரை அருகில் உள்ள காவல் உதவி மையத்தில், சென்னை பெருநகரக் காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் வைக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் இங்கு நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கையில் மாட்டி அனுப்பி வைக்கப்படுவர். ஆகவே, குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையத்தில் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதேபோன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்பாக காணும் பொங்கலை கொண்டாட சென்னை பெருநகரக் காவல் துறையினரால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதே போன்று பெரும் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்கள் ஆகிய இடங்களிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி எந்த அசம்பாவிதங்களும் நிகழாமல் காணும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story