குடிநீர் கேட்டு கிராம மக்கள் மனு


குடிநீர் கேட்டு கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 30 Jan 2017 11:00 PM GMT (Updated: 30 Jan 2017 4:44 PM GMT)

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம்,

குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி அலிஅக்பர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளாக வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள செங்குடி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் 600 குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம். கடந்த காலங்களில் ஊராட்சி சார்பில் மேல்நிலைத்தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. வறட்சி காரணமாக இந்த தண்ணீர் கடந்த 6 மாதமாக சப்ளை செய்யப்படவில்லை.

இதன்காரணமாக ஊருக்கு வெளியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெருமாள் கோவில் ஊருணியில் அமைந்துள்ள கிணற்றில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தோம். இந்தநிலையில் மழை இல்லாமல் போனதால் அந்த கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டது. இதன்காரணமாக நாங்கள் வரிசை வரிசையாக முறை வைத்து தண்ணீர் ஊறியதும் பிடித்து சென்று பயன்படுத்தி வருகிறோம். இரவு நேரங்களில் கோவிலில் படுத்திருந்து ஆண்களும், பெண்களும் நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீர் பிடித்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்கள் கிராமத்தின் வழியாக ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்தில் காவிரி குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயில் இருந்து எங்கள் கிராமத்திற்கு தனியாக குழாய் அமைத்து தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

அசுத்தமான தண்ணீர்

இதேபோல, ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் கிருஷ்ணாபுரம் மீனவர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் அசுத்தமான தண்ணீர் நிறைந்த பாட்டில்களை தலையில் வைத்தவாறு திரளாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகிறோம். இங்கு நிலத்தடி நீர் குடிப்பதற்கு தரமானதாக இருந்ததால் அதனையே பயன்படுத்தி வந்தோம். இந்தநிலையில் எங்கள் ஊர் கடற்கரை பகுதியில் தனியார் சார்பில் உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்பின்னர் இந்த நிலையத்தில் இருந்து வெளியாகும் உப்பு கழிவு நீர் கடலில் கலந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த பகுதி கடலில் மீன்கள் செத்து மிதக்கின்றன. கடலுக்குள் மக்கள் இறங்கவே அஞ்சி வருகின்றனர். மேலும், இந்த சுத்திகரிப்பு நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள அப்பாவு ஊருணியில் உப்பு மற்றும் ரசாயன கழிவுநீர் கலந்து நச்சுத்தன்மை உடையதாக மாறிவிட்டது. குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதக்கின்றன. மேலும், ஆடு, மாடுகள் இந்த ஊருணி தண்ணீரை பருகி இறந்துள்ளன. நிலத்தடி நீர் ஆதாரம் முற்றிலும் மாறி கடும் உப்புத்தன்மையுடன் சுவையிழந்துவிட்டது. இந்த தண்ணீரை குடிக்கும் இந்தபகுதி மக்களுக்கு சிறுநீரக நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும், சிலர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, மக்களின் உயிருக்கு உலைவைக்கும் இதுபோன்ற நிலையங்களை உடனடியாக தடை செய்து நீர்ஆதாரங்களை தூய்மைப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

100 நாள் வேலை

திருவாடானை அருகே உள்ள பாரனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ரூ.50 மட்டுமே கூலி வழங்குகின்றனர். இதுகுறித்து கேட்பவர்களுக்கு வேலை தர மறுப்பதோடு, மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, உரிய கூலி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். இந்த மனுக் களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தண்ணீர் பிரச்சினைக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்ணீர் சப்ளை செய்யவும் உத்தரவிட்டார்.

Next Story