திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஆலோசனைக்கூட்டம்


திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஆலோசனைக்கூட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2017 9:30 PM GMT (Updated: 2017-01-31T01:44:05+05:30)

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலின் பிரம்மோற்சவ விழா தொடர்பாக கோவில் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

பூந்தமல்லி,

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலின் பிரம்மோற்சவ விழா தொடர்பாக கோவில் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

தேவி கருமாரி அம்மன் கோவில்

சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

இந்த கோவிலின் 23–ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவும், இந்த கோவிலுக்கு சொந்தமான வேதபுரீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழாவும் ஒரே நாளில் நடக்க இருக்கிறது.

இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வது குறித்து கோவில் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.     

தேரோட்டம், கும்பாபிஷேகம்

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் தனபால் கூறியதாவது:–

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலின் பிரம்மோற்சவ விழா இன்று (நேற்று) முதல் பிப்ரவரி மாதம் 19–ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 6–ந் தேதி தேவி கருமாரி அம்மன் கோவிலின் தேரோட்டம் நடக்க உள்ளது. அதே நாளில் தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வேதபுரீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழாவும் நடக்க இருக்கிறது.

ஒரே நாளில் தேரோட்டம் மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் திரளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனைக்கூட்டம்

இதற்காக விழா நடைபெறக்கூடிய அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்டவற்றை கண்காணிப்பது, துப்புரவு பணிகளை மேற்கொள்வது, தேர் செல்லக்கூடிய நேரத்தில் அந்தந்த இடங்களில் மின் இணைப்புகளை துண்டிப்பது உள்ளிட்டவை குறித்தும், விழாவையொட்டி ஏராளமான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்தும் அந்தந்த துறை சார்ந்தவர்களை அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து துறைகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிப்ரவரி 13 முதல் 15–ந் தேதி வரை 3 நாட்கள் தேவி கருமாரி அம்மன் கோவில் தெப்ப குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story