ரூ.44 லட்சம் மோசடி: சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது


ரூ.44 லட்சம் மோசடி: சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2017 11:15 PM GMT (Updated: 2017-02-04T02:57:09+05:30)

அரசுவேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.44 லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவான ரியல் எஸ்டேட் அதிபர் சென்னையில் கைது.

திருவள்ளூர்,

அரசுவேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.44 லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவான ரியல் எஸ்டேட் அதிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

அரசு வேலை

திருவள்ளூரை அடுத்த திருத்தணியை சேர்ந்தவர் முரளி. இவர் வேலை தேடி வந்தார். அப்போது வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரித்விராஜ் (வயது 27), அவருடைய நண்பர் பள்ளிப்பட்டு அம்மையார்குப்பத்தை சேர்ந்த ரவி (54) ஆகியோர் முரளியிடம் மெட்ரோ ரெயிலில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

இதற்காக முரளி அவர்களிடம் ரூ.8 லட்சத்து 60 ஆயிரத்தை 2015–ம் ஆண்டு கொடுத்தார். இதேபோல திருத்தணியை சேர்ந்த நாகராஜ் ரூ.7 லட்சத்து 17 ஆயிரம், சோளிங்கரை சேர்ந்த முனிகிருஷ்ணன் ரூ.6 லட்சத்து 60 ஆயிரம், திருத்தணியை சேர்ந்த சண்முகம் ரூ.8 லட்சத்து 60 ஆயிரம், பச்சையப்பன் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம், காசிநாதன் ரூ.3 லட்சத்து 85 ஆயிரம், பூவரசன் ரூ.2 லட்சம், பழனி ரூ.2 லட்சம், பாண்டியன் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் என 9 பேர் தங்களுக்கு அரசு வேலை, மெட்ரோ ரெயிலில் வேலை வாங்கி தரக்கோரி சுமார் ரூ.44 லட்சத்தை பிரித்விராஜ், ரவி ஆகியோரிடம் கொடுத்தனர்.

தலைமறைவு

பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் சொன்னபடி வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் ஆத்திரமடைந்த பிரித்விராஜ், ரவி ஆகியோர் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் தலைமறைவானார்கள்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இது பற்றி திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு காதர்பாஷா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நீலகண்டன், சப்–இன்ஸ்பெக்டர்கள் விஸ்வநாதன், குமரவேல், வாசுதேவன், வீரமணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சென்னையில் கைது

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 3–ந்தேதி ரவியை போலீசார் கைது செய்தனர். சென்னையில் பதுங்கி இருந்த பிரித்விராஜ் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story