சவுடுமண் குவாரியை தடை செய்யக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது


சவுடுமண் குவாரியை தடை செய்யக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 27 Feb 2017 11:00 PM GMT (Updated: 2017-02-28T01:10:30+05:30)

சீர்காழியில், சவுடுமண் குவாரியை தடை செய்யக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சீர்காழி,

தற்கொலை மிரட்டல்

நாகை மாவட்டம், சீர்காழி அருகே ஆலங்காடு கிராமத்தில் அரசு அனுமதியோடு சவுடுமண் குவாரி இயங்கி வருகிறது. இங்கு அரசு விதிமுறைகளை மீறி பள்ளம் தோண்டி சவுடுமண் எடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் மேற்கண்ட பகுதி மக்கள் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக கூறி சவுடுமண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சவுடுமண் குவாரியை தடை செய்யக்கோரி ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் (வயது 21), சதீஷ்குமார் (19) ஆகிய 2 பேரும் நேற்று காலை 8 மணிக்கு சீர்காழி கச்சேரி சாலையில் உள்ள ஒரு தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறினர். பின்னர் அவர்கள், செல்போன் கோபுரத்தின் உச்சியில் அமர்ந்தபடி சவுடுமண் குவாரியை தடை செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை-சிதம்பரம் சாலையில் ஏராளமான பொதுமக்கள் கூடினர்.

2 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் மலர்விழி, துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை மிரட்டல் விடுத்த 2 பேரையும் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வருமாறு கூறினர். இதை தொடர்ந்து அவர்கள் மேலே இருந்து கீழே இறங்கி வந்தனர். இதனையடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்த செல்வகுமார், சதீஷ்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story