சோழவரம், பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
சோழவரம், பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் புழல் ஏரி வேகமாக வறண்டு வருகிறது.
செங்குன்றம்
சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமானவை புழல், பூண்டி, சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள். 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 601 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
சோழவரம் ஏரியில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் புழல் ஏரிக்கு வினாடிக்கு 60 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 881 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 6 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளதால் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படுவது நேற்று முன்தினத்தோடு நிறுத்தப்பட்டது.
அதேபோல பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டு விட்டது.
வேகமாக வறண்டு வருகிறதுபுழல் ஏரிக்கு நீர்வரத்து ஏதும் இல்லாததால் குறைந்த அளவு தண்ணீரே இருப்பு உள்ளது. குடிநீருக்கு எடுப்பதாலும், தற்போது சுட்டெரித்து வரும் வெயில் காரணமாகவும் புழல் ஏரி வேகமாக வறண்டு வருகிறது. ஏரியில் இருப்பு உள்ள தண்ணீர், சென்னை மக்களின் ஒரு மாத குடிநீர் தேவைக்கு வருமா? என்பதே சந்தேகம்தான்.
ஏரியில் தற்போது உள்ள தண்ணீரில் பொதுமக்கள் துணி துவைப்பது, குளிப்பது, மாடுகளை குளிப்பாட்டுவது என மாசுபடுத்தி வருகின்றனர். இதனை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை என கூறப்படுகிறது.
குடிநீர் தட்டுப்பாடுபருவமழை பொய்த்துவிட்டதாலும், கோடை வெப்பம் அதிகமாக உள்ளதாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயத்தை போக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.