பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற மகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
ஈஞ்சம்பாக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்று தீக்காயம் அடைந்த அவரது மகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் வடக்கு 7–வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 47). இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வி (45). புடவை வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு பவானி (15) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று மாலை வீட்டில் இருந்த செல்வி திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டதும், பவானி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்வியை காப்பாற்ற சென்றார்.
ஆஸ்பத்திரியில் அனுமதிஆனால் செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற பவானி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீசார் விரைந்து சென்று செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி* அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் மின் வயர்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த எலக்ட்ரீசியன் விஜயகுமார் (52) மின்சாரம் தாக்கி பலியானார்.
* துரைப்பாக்கம் கண்ணகிநகர் புதுப்பேட்டை மைதானம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக, அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா (40) என்பவரை கைது செய்த போலீசார், 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
* திருமணமான 5 மாதத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறினால், பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகரை சேர்ந்த சத்யராஜ் (28) மனைவி கலைவாணி (24) தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
5 பேர் கைது* சில நாட்களுக்கு முன்பு புழல் பகுதியை சேர்ந்த பத்மநாபன் (50) என்பவரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்ததாக, ரஞ்சித் (23), ஸ்ரீராம் (21), சஞ்சீவி (22), வினோத் (20), கார்த்திக் (23) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
* சேலையூர் சந்தோஷபுரத்தை சேர்ந்த முகமது (30), தனது தாய் ஆயிஷாபஷீரா (50) உடன் மோட்டார்சைக்கிளில் பள்ளிக்கரணை சென்றார். அங்கு சாலையோரம் மோட்டார்சைக்கிள் அருகே ஆயிஷாபஷீரா நின்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் இறந்தார்.
* புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூளைமேட்டை சேர்ந்த செல்வம் (40), நேற்று மாலை சிறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது எந்திரத்தில் இடதுகை சிக்கி விரல்கள் நசுங்கின. இதையடுத்து அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.