செவ்வாய் கிரகத்தில் வாழ உதவும் காந்தக் கவசம்!


செவ்வாய் கிரகத்தில் வாழ உதவும் காந்தக் கவசம்!
x
தினத்தந்தி 21 March 2017 1:12 PM IST (Updated: 21 March 2017 1:12 PM IST)
t-max-icont-min-icon

செவ்வாய் கிரகத்தை ‘டெர்ராபார்மிங்’ செய்ய விண்வெளி விஞ்ஞானிகள் இதுவரை பல பரிந்துரைகளைச் செய்துள்ளனர்.

னிதர்கள் செவ்வாய் கிரகத்திலோ அல்லது ஒரு நிலவிலோ வாழ முடியும் என்பது ஒன்றும் கட்டுக் கதையல்ல. இன்னும் சில பல பத்தாண்டுகளில்          நிச்சயமாக நிகழக்கூடிய ஒரு வரலாற்று நிகழ்வு அது என்பதே உண்மை.

அமெரிக்காவின் நாசா மற்றும் கோடீசுவர விஞ்ஞானி இலான் மஸ்கின் நடத்தும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ரஷியா ஆகிய பல்வேறு நாடுகளின் அரசு மற்றும் பல்வேறு தனியார் ஆய்வு நிறுவனங்களும் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை விரைவில் அனுப்புவதற்கு முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன.

அதெல்லாம் சரி, மிக மிகக் குளிர்ந்த, மனித மற்றும் பிற உயிர்கள் உயிர்வாழ அத்தியாவசியமான பிராண வாயு, கரியமில வாயு உள்ளிட்ட பிற வாயுக்கள் மற்றும் நீர்நிலைகள் இல்லாத செவ்வாய் கிரகத்தில் குடியேற பெட்டி படுக்கையை மட்டும் தூக்கிக்கொண்டு எப்படி செல்வது?

ஆக, செவ்வாய் கிரகத்தை உயிர்வாழ்க்கைக்கு ஏற்றவாறு முதலில் மாற்றி அமைத்தாக வேண்டும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை மெல்ல மெல்ல மனித வாழ்க்கைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தலை ‘டெர்ராபார்மிங்’ (terraforming) என்கிறது விண்வெளி விஞ்ஞானம்.

செவ்வாய் கிரகத்தை ‘டெர்ராபார்மிங்’ செய்ய விண்வெளி விஞ்ஞானிகள் இதுவரை பல பரிந்துரைகளைச் செய்துள்ளனர். அவற்றுள் முக்கியமான மற்றும் சுவாரசியமான ஒன்று, செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியில் அதைச்சுற்றி கவசம் போன்ற ஒரு அமைப்பை நிறுவுவது.

செவ்வாய் உள்ளிட்ட பல்வேறு கிரகங்களை மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் ஆபத்தான அண்ட கதிரியக்கம் தாக்கிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாகவே அங்கு உயிர்வாழ்க்கைக்கு தேவையான எந்த வாயுவும் இருப்பதில்லை.

ஆனால், கதிரியக்கம் ஊடுருவாமல் தடுக்கும் கவசம் ஒன்றை நிறுவும்போது, அதனுள்ளே அடைபட்டுக் கிடக்கும் கரியமில வாயுவை வெளியேற்றி அதன் மூலமாக ஒரு வளிமண்டலத்தை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுவரை அத்தகைய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், துரதிர்ஷ்டவசமாக எதுவும் முழுமையாக வெற்றி பெறவில்லை. ஆனால் அதற்காக டெர்ராபார்மிங் என்பதே சாத்தியமேயில்லை என்றும் கூறிவிட முடியாது என்கிறார்கள் விண்வெளி ஆய்வாளர்கள்.

இந்த கூற்றை ஊர்ஜிதம் செய்யும் விதமாக, நாசா ஆய்வு மையம் சமீபத்தில் ஒரு தனித்துவமான திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

கிரகத்தைச் சுற்றி காந்தவிசையால் ஆன ‘காந்தக் கவசம்’ (magnetic shield) ஒன்றை நிறுவுவதுதான் நாசாவின் திட்டம். ஏனென்றால், தற்போதைய கருதுகோள்படி செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலமானது சூரிய புயல்களின் தாக்கம் காரணமாக  காந்த மண்டலம் சிதைந்ததாலேயே அழிந்து போயிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

மேலும், செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலம் ஒரு காலத்தில் அதன் வளிமண்டலத்தை பாதுகாத்தது என்ற காரணத்தால் நாசா  விஞ்ஞானிகள் அதனை செயற்கை மீட்டுருவாக்கம் செய்ய முடியும் என்று கருதுகின்றனர்.

முக்கியமாக, எதிர்காலத்தில் காற்றால் ஆன பலூன் போன்ற ஒரு அமைப்பின் மூலம் சுமார் ஒன்று முதல் இரண்டு டெஸ்லா (12 Tesla) அல்லது 10,000  முதல் 20,000 காஸ் (Gauss) அளவு காந்தவிசை கொண்ட மற்றும் சூரிய புயலில் இருந்து செவ்வாயை பாதுகாக்கக் கூடிய செவ்வாய் கிரகத்துக்கான காந்த மண்டலத்தை உருவாக்க முடியும் என்கிறார் நாசாவின் கிரக அறிவியல் துறையின் இயக்குனரான முனைவர் ஜிம் கிரீன்.

அதுமட்டுமல்லாமல், தற்போது செயற்கை காந்த மண்டலம் (artificial magnetosphere) எனும் ஆய்வு மாதிரி மீதான ஒப்புருவாக்க (simulation) ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், செவ்வாய் கிரகத்தை சூரிய புயலில் இருந்து பாதுகாக்கும் திறன் செயற்கை காந்த மண்டலத்துக்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் டெர்ராபார்மிங் முயற்சியில் இது ஒரு வெற்றிகரமான முதல் படி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story