பணி மூப்பு பட்டியல் தயாராகி 3 மாதங்கள் ஆகியும் கூட்டுறவு தணிக்கைதுறையில் முதுநிலை ஆய்வாளர் பதவி உயர்வு


பணி மூப்பு பட்டியல் தயாராகி 3 மாதங்கள் ஆகியும் கூட்டுறவு தணிக்கைதுறையில் முதுநிலை  ஆய்வாளர் பதவி உயர்வு
x
தினத்தந்தி 30 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-30T21:57:59+05:30)

கூட்டுறவு தணிக்கை துறையில் முதுநிலை ஆய்வாளர் பதவி உயர்வுக்கான

விருதுநகர்,

தமிழக கூட்டுறவுத்துறையில் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளை தணிக்கை செய்ய கூட்டுறவு துறையிலேயே அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவு நிறுவனங்களில் கணக்குகளை தணிக்கை செய்ய கூட்டுறவு தணிக்கை துறை என்ற தனித்துறை அமைக்கப்பட்டது. இத்துறை தனி பதிவாளரின் கீழ் செயல்பட்டு வருகிறது. கணக்குகளை தணிக்கை செய்ய இளநிலை ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை அதிகாரி என பல்வேறு நிலைகளில் அலுவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

பட்டியல்

இவர்களில் இளநிலை ஆய்வாளர் பணியில் இருந்து முதுநிலை ஆய்வாளர் பணிக்கு பதவி உயர்வு வழங்க ஆண்டு தோறும் பணி மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு வரிசைப்படி பதவி உயர்வு வழங்கப்படும். நடப்பு நிதியாண்டிற்கு கடந்த ஆண்டு இறுதியில் பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆனால் பதவி உயர்வு வழங்கப்பட வில்லை. இது குறித்து பணியாளர் சங்கம் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததோடு, பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இப்பிரச்சினையில் உயர் அதிகாரிகள் பாராமுகமாகவே உள்ளனர் என பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவிக்கும் நிலை உள்ளது.

கோரிக்கை

இந்த தாமதத்தினால் பதவி உயர்வு பெற வேண்டியவர்களுக்கு ஊதிய இழப்பீடு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள பதவி உயர்வுக்கான பட்டியலின்படி அதில் இடம் பெற்றவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


Next Story