சுய உதவி குழுக்களுக்கு ரூ.605 கோடி கடன் உதவி கலெக்டர் நடராஜன் தகவல்


சுய உதவி குழுக்களுக்கு ரூ.605 கோடி கடன் உதவி கலெக்டர் நடராஜன் தகவல்
x
தினத்தந்தி 3 May 2017 10:30 PM GMT (Updated: 3 May 2017 6:24 PM GMT)

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சுய உதவி குழுக்களுக்கு ரூ.605 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ஊரக வாழ்வாதார இயக்கம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது தேவைகளை தாங்களே கண்டறிந்து வளமான சமுதாயத்தை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த திட்டம் ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை, நயினார்கோவில், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் மண்டபம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட மொத்தம் 205 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஊராட்சியிலும் புதிய மகளிர் சுய உதவிக்குழு ஏற்படுத்தப்பட்டு 205 ஊராட்சிளில் தலா ஒரு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சங்கங்களுக்கு ரூ.8.77 கோடி மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன. 1,650 புதிய சுய உதவி குழுக்களும், இதேபோல 358 மாற்றுத்திறனாளிகள் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பு நிதி திட்டத்தின்கீழ் 3,874 மாற்றுத்திறனாளிகளுக்கும், 1,637 நலிவுற்றோர்களுக்கும் மொத்தம் ரூ.1.24 கோடி மதிப்பில் தனிநபர் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.605 கோடி

இளைஞர் தொழில் திறன் பயிற்சியின்கீழ் ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.3.65 கோடி மதிப்பில் 1,400 கிராமப்புற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

ஏழை மகளிரை குடும்பத்தலைவராக கொண்ட குடும்பங்களை சார்ந்த 260 இளைஞர்களுக்கு தொழிற்திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் 203 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.203 லட்சம் மதிப்பில் ஊக்க நிதி வழங்கப்பட்டு, பெருங்கடனாக ரூ.46 கோடி மதிப்பில் சுழற்சி முறையில் கடன் உதவி வழங்கப்பட்டுஉள்ளது. இதுதவிர ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 2,076 சுய உதவிக்குழுக்களுக்கு நேரடி வங்கி இணைப்பின் மூலம் ரூ.605 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுஉள்ளது.

ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள், நலிவுற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பகுதி நேர தொழிலாக நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து அரசு மானியத்துடன் நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் செய்து அவர்கள், வருமானம் ஈட்டி வருகின்றனர்.

மேலும் நாட்டுக்கோழி குஞ்சு வளர்ப்புக்காக கோழிக்குஞ்சுகள் தனியார் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு வளர்ப்புக்காக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

Next Story