மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 30 May 2017 10:45 PM GMT (Updated: 2017-05-31T03:31:16+05:30)

பள்ளிபாளையம் அருகே மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் அருகே உள்ள பெருமாள்மலை பகுதியில் ஏற்கனவே ஒரு மதுக்கடை திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்தநிலையில் அங்கு மேலும் புதிதாக ஒரு மதுக்கடை கட்டப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதையொட்டி நேற்று வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மதுக்கடை முன்பு திரண்டு வந்து மதுக்கடையை மூட வேண்டும் என்றும், புதிதாக கட்டப்பட்டு வரும் மதுக்கடைக்கு அனுமதி வழங்க கூடாது என்றும் வலியுறுத்தி கைகளில் கருப்புக்கொடி ஏந்தி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். மேலும் சிலர் வீடுகளிலும் கருப்புக்கொடி கட்டி இருந்தனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிபாளையம் தாசில்தார் ரகுநாதன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் திறந்த மதுக்கடையை மூடவேண்டும் என்றும், புதிதாக கட்டப்படும் மதுக்கடையை திறக்க கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து தாசில்தார் ரகுநாதன் பொதுமக்களிடம், மதுக்கடையை நிரந்தரமாக மூடுவதற்கும், புதிதாக கட்டப்பட்டு வரும் மதுக்கடையை திறக்க அனுமதி மறுத்தும் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியத்துக்கு பரிந்துரை செய்வதாக கூறினார். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story